மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதில் 14-வது நாளாக இழுபறி நீடிக்கும் நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோரி பாஜக தலைவர்கள் இன்று ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளது.
நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா – சிவசேனா கூட்டணி கட்சிகள் அதிக இடங்களைப் பிடித்தது. எனினும், முதலமைச்சர் பதவி தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையில், தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், சிவசேனாவிற்கு ஆதரவு தர மறுத்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், எதிர்க்கட்சி வரிசையில் அமர விருப்பம் தெரிவித்திருந்தார். இதனால், புதிய அரசு அமைவதில், தொடர்ந்து 14 நாட்களாக இழுபறி நீடித்து வருகிறது.
பாஜக – சிவசேனாவின் கூட்டணி ஆட்சியே அமைய வேண்டும் என்ற சரத்பவாரின் பேச்சை வரவேற்றுள்ள பாஜக, அம்மாநில ஆளுநரை இன்று சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளனர். இந்த பரபரப்பான சூழலில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார்.