மம்தா பானர்ஜி பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக புகார்

வன்முறையை கட்டவிழ்த்துவிடும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் பா.ஜ.க. புகார் மனு அளித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவுகிறது. ஜாதவ்பூரில் பா.ஜ.க. பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கொல்கத்தாவில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்ற பேரணி நடைபெற்றது. அப்போது பா.ஜ.க.வினருக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

இந்தநிலையில் வன்முறையை கட்டவிழ்த்துவிடும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. இதற்கான மனுவை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் மத்திய அமைச்சர்களான முக்தர் அப்பாஸ் நக்வி, நிர்மலா சீதாராமன், ஜிநேந்திர பிரசாத் ஆகியோர் அளித்தனர்.

Exit mobile version