இந்தியாவில், தமிழகத்தில் தான் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 24-ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். பேரணிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், இந்தியாவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், தமிழகத்தில் அதிகமாக இருப்பதாக தெரிவித்தார். பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை மேலும் அதிகரிக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.