தமிழகத்தில் இருமொழி கொள்கையே அதிமுகவின் கொள்கை! யாராலும் இந்தியை திணிக்க முடியாது! – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

திமுக ஒரு ஊழல் கட்சி என்பதை தமிழகத்துக்கு மட்டும் தெரிந்திருந்த நிலையில், அவற்றை இந்தியா முழுவதும் பிரதமர் மோடி தெரியப்படுத்தியுள்ளார் என முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

திருட்டுக் கும்பல் திமுக..!

மாலை முரசு பத்திரிக்கை அதிபரும், நிறுவனருமான ராமச்சந்திர ஆதித்தனாரின் பிறந்த நாளை ஒட்டி அவர்களது அலுவலகத்தில் உள்ள படத்துக்கு முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளரும், மாவட்ட கழக செயலாளருமான டி ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திமுக ஒரு ஊழல் கட்சி என்பதை நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசி இருப்பதன் மூலம், இந்தியா முழுவதும் திமுக ஒரு ஊழல் கட்சி என்பது தெரிந்து இருப்பதாக கூறியுள்ளார்.

பாடம் புகட்டிய புரட்சித் தலைவி..!

பெண்மையை இழிவு படுத்தி வரும் திமுகவுக்கு, 1991 ஆம் ஆண்டிலேயே தமிழக சட்டப்பேரவையில் பாடம் புகட்டியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என டி.ஜெயக்குமார் கூறினார். திருட்டு கும்பலை பற்றி நாடாளுமன்றத்தில் பேசி இருப்பதன் மூலம் தமிழகத்துக்கு மட்டும் தெரிந்திருந்த உண்மை தற்போது நாடு முழுவதும் வெளிப்பட்டு இருப்பதாக கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவினர் நம்பர் ஒன் திருடர்கள் என்பதை பிரதமர் வெளிப்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மணிப்பூர் விவகாரம் குறித்து…!

மணிப்பூர் கலவரத்தில் பெண்களை இழிவு படுத்தியவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு என்றும் கூறினார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்து ஒட்டுமொத்த தமிழக மீனவர்களையும் வஞ்சித்து விட்டு, தற்போது மீனவர்கள் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்பது வியப்பளிக்கும் வகையில் இருப்பதாகவும் ஜெயக்குமார் விமர்சித்தார். மீனவர்கள் மாநாட்டில் பங்கேற்க செல்லும் ஸ்டாலினுக்கு மீனவர்கள் கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றார் அவர்.

ரிமோட் அமைச்சர்..!

தமிழகத்தில் அதிகரித்திருக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தாமலும், நாள்தோறும் நடைபெறும் கொலை, கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாமலும் திணறி வரும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தினந்தோறும் நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் கலந்து கொள்வதிலுமே ஆர்வம் காட்டி வருவதாகவும், ஸ்டாலின் ஒரு விழா நாயகன் என்றும் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் விமர்சித்து உள்ளார்.

தமிழகத்தில் ஒருபொழுதும் ஹிந்தி மொழியை திணிக்க முடியாது என்று கூறிய முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார், தமிழகத்தில் இரு மொழி கொள்கையே அதிமுகவின் கொள்கை என்றும் கூறினார்.

 

Exit mobile version