தமிழகத்துக்கு இருமொழி கொள்கை போதும்… சமஸ்கிருதத்துக்கு எழுத்து வடிவம் கூட கிடையாது என்று பேசி, ஆளுநரை அமைச்சர் பொன்முடி வம்புக்கு இழுத்துள்ளது குறித்து பார்ப்போம்…
விழுப்புரம் திருவிக வீதியிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான கலைவிழா போட்டிகளை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, திமுக எம்எல்ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், தமிழகத்திற்கு இரு மொழிக்கொள்கையே போதும். ஆனால் மத்திய அரசு மூன்றாவதாக ஒரு மொழியை கற்க கூறுவதாகவும் சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவம் கூட கிடையாது எனவும் கூறினார்.
சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, நிகழ்ச்சி ஒன்றில் தமிழுக்கு இணையானஅந்தஸ்துள்ள மொழி சமஸ்கிருதம் என பேசியிருந்தார். அப்போது திமுக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. ஆளுநர் பேசிய கருத்துக்கு பதில் அளிக்கும் வகையிலேயே பள்ளிமேடையில் பொன்முடி பேசி ஆளுநர் ஆர்.என்.ரவியை வம்புக்கு இழுத்திருக்கிறார் அமைச்சர். பள்ளி மாணவர்களுக்கான நிகழ்ச்சியில், மொழி குறித்து பேசி பொன்முடி சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களேஅதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அதே போன்று மாவட்ட கல்வி அலுவலரையும், அமைச்சர் மட்டம் தட்டி பேசியதாகவும் அதிருப்தி கிளம்பியிருக்கிறது. மாணவிகள் பாடங்களை மனப்பாடம் செய்து படிக்காமல் அனைத்தையும் தெரிந்து படிக்க வேண்டும் என்று கூறிய பொன்முடி, எடுத்துக்காட்டாக நிகழ்ச்சிக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியாமல் மாவட்ட கல்வி அலுவலர் மகாலட்சுமி அனைவரது பெயரையும் மனப்பாடம் செய்தது போல் படித்தார் என்று மாணவிகள் மத்தியிலேயே மாவட்ட கல்வி அலுவலரை இழிவுபடுத்தியதும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொன்முடி என்றாலே சர்ச்சை…. சர்ச்சை என்றாலே பொன்முடி என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது.
Discussion about this post