சென்னை மாநகரத்தில் பெருகி வரும் வாகனங்களுக்கு மத்தியில் பைக் ரேஸ் எனப்படும், இருசக்கர வாகன பந்தயம் என்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மெரினா கடற்கரைச் சாலையில் இரவு நேரங்களில் இளைஞர்கள் அட்டகாசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையை வெளிப்படுத்துகிறது இந்த தொகுப்பு…
சென்னையில் 2019 ஆண்டு இதுவரை போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகமாக வாகனங்களை இயக்கியது தொடர்பாக 18 ஆயிரத்து 337 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் சாலை விதிகளை மீறியும் மதுபோதையில் வாகனத்தை இயக்கியது, தலைக்கவசம் அணியாமல் சென்றது என்ற புகாரில் 57 ஆயிரத்து 636 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆர்.டி.ஓ.விற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதில் 37,338 பேரின் ஒட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 3ஆம் தேதியில் இருந்து காவல்துறை அதிகாரிகள், 2 துணை ஆணையர்கள் தலைமையில் 130 காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை தடுப்புகளை வைத்து 20 சட்டம் ஒழுங்கு வாகனங்கள் மற்றும் 5 போக்குவரத்து வாகனங்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுவதாக போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீ அபினவ் குறிப்பிட்டார். பைக் ரேஸை தடுக்க பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
வாகனங்களை வேகமாக ஓட்டினால் மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 184இன் படி 1000 ரூபாய் அபராதம் விதிக்கலாம்.அதேபோல பிரிவுகள் 279, 337 ஆகியவற்றின் கீழ் 6 மாத சிறை தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை தண்டணையும் விதிக்கக் கூடிய சட்டப் பிரிவுகளும் உள்ளன.
18 வயதுக்குக் கீழே உள்ளவர்களில் இருசக்கர வாகனத்தை இயக்கினால் அந்த தண்டனையை அப்படியே பெற்றோர்களுக்கும் வழங்கலாம் என்றும் சட்டம் சொல்கிறது. பெற்றோருடன் மாணவர்கள் படிக்கும் கல்லூரிகளும் அவர்களை கண்காணிக்க வேண்டும் என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆதிலட்சுமி.
இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலம் என்ற கூற்றை பொய்யாக்கும் விதமாக பைக் ரேஸில் ஈடுபடக்கூடாது. தங்களின் சுய லாபத்திற்காகவும் சாலையில் செல்லக்கூடிய அப்பாவி வாகன ஓட்டிகளை பாதிக்கக்கூடிய நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது என்று கூறுகின்றனர் இளைய தலைமுறையினர்.