உலக கோப்பையை தட்டிப் பறித்தவர் சிறந்த குடிமகன் விருதுக்கு பரிந்துரை

நியூசிலாந்து நாட்டின் உலக கோப்பை கனவை தகர்த்தெறிந்த பென் ஸ்டோக்ஸின் பெயரை, சிறந்த குடிமகன் விருதுக்கு, அந்நாட்டு தேர்வுக்குழு பரிந்துரைத்துள்ளது.

நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இருந்தார். அவர், இறுதிப் போட்டியில் 84 ரன்கள் எடுத்ததன் மூலம் போட்டி டிரா ஆனது.

பின்னர், சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இதில், முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 15 ரன்கள் எடுத்தது. சூப்பர் ஓவரிலும் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக ஆடியதன் மூலம் இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில், தன் நாட்டு கோப்பை கனவை கலைத்த பென் ஸ்டோக்ஸ்ன் பெயர் நியூசிலாந்து நாட்டின் சிறந்த குடிமகன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில், சிறந்த குடிமகனை தேர்ந்தெடுக்கும் குழுவில், போட்டியில் தோல்வியடைந்தாலும் இறுதிப்போட்டியில் சிறந்த தலைமையைக் கொண்ட அணியை வழிநடத்தியதற்காக கனே வில்லியம்சன் பெயரும், நியூசிலாந்து அணி மற்றும் அந்நாட்டு மக்களின் கோப்பை கனவை தகர்த்த பென் ஸ்டோக்ஸ்ன் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது.

நியூசிலாந்தில் பிறந்த பென் ஸ்டோக்ஸ், 12 வயதுக்கு பிறகு இங்கிலாந்துக்கு குடியேறியுள்ளார். அவரது தந்தை ஜெரார்டு, நியூசிலாந்துக்காக ரக்பி லீக்கில் விளையாடிய பிறகு, பயிற்சியாளராக பணிபுரிந்தார். பின்னர், ஜெரார்டு நியூசிலாந்திற்கு திரும்ப, பென் ஸ்டோக்ஸ் மட்டும் இங்கிலாந்திலேயே தங்கிவிட்டார். இந்நிலையில், பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து குடிமகன் என்பதால் தான் அவரது பெயரை சிறந்த குடிமகன் விருதுக்கு பரிந்துரைத்தோம் என்று தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

Exit mobile version