தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை தொடங்க உள்ளது.
தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் சார்பில் பொறியியல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பம் செய்த 1 லட்சத்து 4 ஆயிரம் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
இதையடுத்து பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நாளை துவங்க உள்ளது. முதல் மூன்று நாட்கள் சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற உள்ளது. முதல் நாளில் மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. காலை 9.30 மணிக்கு துவங்கும் இந்த கலந்தாய்வு 12.30 மணிவரையிலும் தொடர்ந்து 1.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரையிலும் நடைபெற உள்ளது.
2ம் நாளான புதன்கிழமை, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 7 பிரிவுகளாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மூன்றாம் நாளான வியாழக்கிழமை, விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 8 பிரிவுகளில் நடைபெறுகிறது.
+2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு வரும் 26ம் தேதி முதல் 28ம் தேதிவரை நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு 7 பிரிவுகளாக நடைபெற உள்ளது.
இதைத் தொடர்ந்து பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3 ஆம் தேதி முதல் ஆன்லைன் முறையில் நடைபெறவுள்ளது.