விசாரணை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை சித்திரவதையை செய்த விவகாரத்தில் அம்பாசமுத்திரம் உதவி காவல் துறை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் அறிக்கையை கொடுக்க தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு இட்டுள்ளது.
அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக பணியாற்றிவந்த பல்வீர்சிங் குற்றவாளிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய இருதரப்பினரையும் பல் பிடுங்கிய விவகாரம் தமிழகம் முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து அவரை விசாரிக்கத் தொடங்கியது. பிறகு மக்கள் மற்றும் ஊடகங்களின் வாயிலாக சர்ச்சைகள் கிளம்பிய பின்னர் அவரை பணியிடை நீக்கம் செய்து விசாரிக்க அதிகாரி ஒருவரை அமைத்தது தமிழக அரசு. அதிலும் அவருடன் ஒரே பேட்சியில் படித்த அதிகாரியை நியமித்தனர். அதற்கும் சர்ச்சை வந்த பிறகு அமுதா ஐஏஎஸ் தலைமையிலான விசாரணை கமிசனை அமைத்தது தமிழக அரசு. தொடர்ந்து அவர் விசாரணை மேற்கொண்டு வரும் வேளையில் சில முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வீர் சிங்குடன் சேர்ந்து இன்னும் ஒரு நான்கு காவல் அதிகாரிகள் 19 பேரை சித்திரவதை செய்துள்ளனர். அதில் 18 குற்றங்களுக்கு இன்னும் முதல் தகவல் அறிக்கை பதியப்படவில்லை. தற்போது பல்வீர் சிங் விவகாரத்தில் எத்தகைய நடவடிக்கை எடுத்தீர்கள் என்று தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.