இந்த ஆண்டுக்கான சாகித்ய பால புரஸ்கார் விருது சிறார் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் உதயசங்கர் கோவில்பட்டியைப் பூர்வீகமாகக் கொண்டவர். இலக்கிய உலகில் கோவில்பட்டியைப் பற்றி ஒரு பேச்சு உண்டு. ”கோவில்பட்டியின் வெளியிருந்து கல் ஒன்றை வீசினால், அது நிச்சயம் எழுத்தாளர் ஒருவரது தலையில்தான் படும்.” அதற்கு ஏற்றார்போல் கோவில்பட்டியில் எழுத்தாளர்கள் அதிகம். எழுத்தாளர் உதயசங்கருக்கு 2023ம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது – ஆதனின் பொம்மை என்ற இளையோர் நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது. வானம் பதிப்பகத்திற்கு கிடைக்கும் இரண்டாவது பால புரஸ்கார் விருது இதுவாகும். முதல் விருது 2020ம் ஆண்டு நண்பர் யெஸ். பாலபாரதி எழுதிய மரப்பாச்சி சொன்ன ரகசியம் புத்தகத்திற்காக வழங்கப்பட்டது.
உதயசங்கர் 1978 முதல் எழுதி வருகிறார். இது வரை 8 சிறுகதைத் தொகுப்புகள், 7 கட்டுரைத் தொகுப்புகள், மலையாளத்திலிருந்து 7, ஆங்கிலத்திலிருந்து 3 மொழிபெயர்ப்பு நூல்கள், கவிதைத் தொகுப்புகள் 5, ஒரு குறு நாவல் தொகுப்பு ஆகியன வெளிவந்துள்ளன.
சிறார் இலக்கியத்தில் 1991 முதல் எழுதிவருகிறார். இதுவரை கதை மற்றும் நாவல் உட்பட 51 புத்தகங்கள், ஒரு சிறார் பாடல் புத்தகம், 67 சிறார் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன.