பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பிரபல பேட்மிண்டன் வீராங்கனை

ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

இந்தியாவில் பேட்மிண்டன் வீராங்கனைகளில் மிகவும் முக்கியமானவர் சாய்னா நேவால். இந்தியாவின் சார்பில் பல்வேறு சர்வதேச போட்டிகளில் சாம்பியன் பட்டங்களையும், ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் உள்ளிட்ட தொடர்களில் பதக்கங்களையும் குவித்து நாட்டிற்கு பெருமைச் சேர்த்துள்ளார். இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்ற சாய்னா நேவால், கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அர்ஜூன் சிங் முன்னிலையில் தன்னை கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். தொடர்ந்து, சாய்னா உடன் சென்ற அவரது சகோதரியும் பாஜகவில் இணைந்துக் கொண்டார்.  இவர்கள் இருவரையும், பாஜக மூத்த தலைவர்கள் வரவேற்று, வாழ்த்து தெரிவித்தனர்.

பாஜகவில் இணைந்த பின் சாய்னா கூறுகையில், “நான் நாட்டிற்காக பதக்கங்களை குவித்து உள்ளேன். மிகவும், கடின உழைப்பாளி ஆன நான், அப்படி கடினமாக உழைக்கும் நபர்களை விரும்புகிறேன். பிரதமர் மோடி நாட்டிற்காக இவ்வளவு செய்வதை என்னால் பார்க்க முடிகிறது. அவருடன் இணைந்து நாட்டிற்கு எதையாவது செய்ய விரும்புகிறேன்” என தெரிவித்தார்.

கடந்தாண்டு, முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், மல்யுத்த வீரர் பபிதா போகட் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version