அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை, வேறு மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, 17 பேர் கடந்த ஆண்டு ஜுலை மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிரான வழக்கு, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டால் தங்களுக்கு நியாயம் கிடைக்காது எனக் கூறி, விசாரணையை வேறு மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என, ரவிகுமார் உள்பட 14 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனித உரிமை என்பது பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் உள்ளதால், இந்த மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.