பிரதமர் கூறிய திட்டத்தின் கீழ் கருப்பு பணத்தை பொதுமக்களுக்கு வங்கியில் செலுத்த உள்ளதாக கூறி கைபேசி அழைப்பு மூலம் தெரிவித்த போலி வங்கி அதிகாரியை, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் கிண்டலடித்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களை சிரிக்க வைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான முன்னாள் கவுன்சிலர் உவைஸுக்கு சில தினங்களுக்கு முன் செல்போன் மூலம் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் மறுமுனையில் பேசிய நபர் தன்னை வங்கி அதிகாரி என கூறி, பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே அறிவித்த கருப்பு பணத்தை பொதுமக்களுக்கு வழங்கவுள்ள திட்டத்தை தர துவங்கியுள்ளதாகவும், முதற்கட்டமாக 25,500 ரூபாய் பணம் தவணையாக வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் எனவும், அதற்கு வங்கி கணக்கு எண் தர வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த முன்னாள் கவுன்சிலர் உவைஸ், இஸ்லாமியர்களில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் இடமான மையவாடியில் வங்கி உள்ளதாக கூறி கேலி செய்துள்ளார். நீண்ட உரையாடலுக்கு பின் சுதாரித்துக் கொண்ட போலி அதிகாரி இணைப்பு துண்டித்தார். இந்த ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.