சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்படி ஆஸ்திரேலிய விசா நடைமுறைகள் மாற்றம்

ஆஸ்திரேலிய நாட்டின் விசாவில், இந்தியா உள்ளிட்ட அயல்நாடுகளில் இருந்து வருபவர்களுக்குப் பயன்படும்படி சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

இந்தியர்கள் அதிகம் பயணிக்கும் நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா உள்ளது. சமீப ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கான விசா பல புதிய நிபந்தனைகளை சந்தித்து, ஆஸ்திரேலிய பயணங்கள் கடுமையாக்கப்பட்ட நிலையில், தற்போது ஆஸ்திரேலிய விசா மீண்டும் பல சலுகைகளுடன் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மாற்றங்களுக்கு ஆஸ்திரேலிய காட்டுத்தீ விபத்துதான் காரணமாக உள்ளது.
 
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்லாந்து மாகாணங்களில் 6 மாதங்களுக்கு கட்டுக்கடங்காமல் எரிந்த காட்டுத்தீயால் 100 கோடிக்கும் அதிகமான உயிரினங்கள் இறந்தன. 6 மில்லியன் ஹெக்டேருக்கும் அதிகமான நிலமும் பாழானது.
 
ஆஸ்திரேலியக் காடுகளில் ஏற்பட்ட இந்த வரலாறு காணாத தீ விபத்து ஆஸ்திரேலியாவின் முந்தைய வரைபடத்தையே மாற்றி உள்ளது. பல இடங்களில் மக்கள் நடமாட்டமே இல்லை.
       
இதனால் ஆஸ்திரேலியாவை மீட்டெடுக்கும் பணிகளில் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஈடுபடுத்த ஆஸ்திரேலிய அரசு முடிவெடுத்து உள்ளது. அதற்காகத்தான் ஆஸ்திரேலிய விசா நடைமுறைகள் மாற்றப்பட்டு உள்ளன.
 
இனி ஆஸ்திரேலிய விசாவின் காலத்தை நீட்டிக்க விரும்புபவர்கள், ஆஸ்திரேலியாவில் தன்னார்வலராகப் பணியாற்றுவதை ஒரு பணியாகக் குறிப்பிட்டால் அவர்களின் விசா ஒருமாதகாலம் நீடிக்கப்படும். அந்தக் காலத்தில் அவர்கள் மீட்புப் பணியில் பங்கேற்றுக் கொண்டே தங்கள் சொந்த வேலையையும் பார்த்துக் கொள்ளலாம்.
 
மேலும், சுற்றுலா விசாவில் வந்து ஆஸ்திரேலியாவில் பணியாற்றுபவர்களுக்கான கால அவகாசமும் இப்போது 6 மாதத்தில் இருந்து 6 ஆண்டாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்துபவர் காட்டுத்தீயின் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் ஒன்றில்தான் பணியாற்ற வேண்டும், அதுவும் ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது நிறுவனத்தில்தான் பணிக்காலம் முழுவதும் பணியாற்ற வேண்டும். பணி மாறினால் விசா செல்லாது.
 
இந்த அறிவிப்பினால் ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, காட்டுத்தீயில் இருந்து ஆஸ்திரேலியா விரைவில் மீளும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் ஆஸ்திரேலியாவில் 6 ஆண்டுகளுக்கும் அதிகமாகப் பணியாற்ற விரும்புபவர்கள் மற்றும் ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற விரும்புபவர்களுக்கு இந்த அறிவிப்பு பயன்படாது.

Exit mobile version