ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா ஆஸ்திரேலியாவின் அஷ்லி பர்டியிடம் (Ashleigh Barty) அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4ஆம் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பிரபல வீராங்கனையான ரஷ்யாவின் மரிய ஷரபோவா ஆஸ்திரேலியாவின் அஷ்லி பர்டியை எதிர்கொண்டார்.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்போட்டியின் முதல் செட்டை 6 க்கு 4 என்ற கணக்கில் ஷரபோவா கைப்பற்றினார். பின்னர் சிறப்பாக விளையாடிய பர்டி 6 க்கு 1 என்ற கணக்கில் 2 ஆம் செட்டையும், 6 க்கு 4 என்ற கணக்கில் 3 ஆம் செட்டையும் பர்டி கைப்பற்றியதையடுத்து ஷர்போவா அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். இப்போட்டியில் வென்றதன் மூலம் பர்டி காலிறுதிக்கு முன்னேறினார்.
கலப்பு இரட்டையரில் நடந்த முதல் சுற்றுப் போட்டியில், ஃபிரான்ஸின் கிறிஸ்டினா மிலாடினோவிக், ஸ்வீடனின் ராபர்ட் லின்ஸ்டெட் இணை, ஸ்வீடனின் ஜோன்னா லார்சன், இங்கிலாந்தின் டோமினிக் இங்லாட் இணையை 6 க்கு 2, 6 க்கு 2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி 2 ஆம் சுற்றுக்கு முன்னேறியது.
பெண்கள இரட்டையர் பிரிவின் மூன்றாம் சுற்றுப் போட்டியில், ரோமானிய வீராங்கனைகளான இரினா பாரா, மோனிக்கா நிகுலிஸ்கு இணையை எதிர்கொண்ட அமெரிக்காவின் ரகுவல் அடவோ, சுலோவேனியாவின் கடாரினா ஸ்ரிபொட்னிக் இணை 6 க்கு 2, 3க்கு 6, 6 க்கு 3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்தசுற்றுக்கு முன்னேறியது.
பெண்கள் இரட்டையர் பிரிவின் முன்றாம் சுற்றில் நடந்த மற்றொரு போட்டியில் அமெரிக்க வீராங்கனைகளான ஆசியா முகமது, கைட்லின் கிறிஸ்டியன் இணையை எதிர்கொண்ட சுலோவேனியாவின் அண்ட்ரஜா க்ளிபாக், ஸ்பெயினின் மரிய ஜோஸ் இணை 6 க்கு 2, 6 க்கு 2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
Discussion about this post