எடியூரப்பா பேசிய ஆடியோ வெளியானதால் கர்நாடகாவில் பரபரப்பு

கர்நாடகாவில் அமித் ஷாவின் திட்டப்படியே குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா அரசு கவிழ்க்கப்பட்டதாக எடியூரப்பா பேசியது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கூட்டணியைச் சேர்ந்த 17 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் அளித்த அவர்கள் மும்பையில் இருந்த ரிசார்ட்டில் தங்கியிருந்தனர். இந்நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாததால் முதல்வர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். மேலும் 17 எம்.ஏல்.ஏக்களையும் தகுதிநீக்கம் செய்து அன்றைய சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டார். இந்நிலையில் பாஜக தலைவர் அமித் ஷாவின் உத்தரவின் பேரிலேயே அதிருப்தி எம்.எல்.ஏக்களும் ரிசார்டில் தங்க வைக்கப்பட்டதாக முதலமைச்சர் எடியூரப்பா பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், பாஜக ஆட்சி அமைய தங்கள் பதவியைத் தியாகம் செய்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் அமித் ஷாவின் திட்டப்படியே கர்நாடகாவில் ஆட்சி கலைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்த ஆடியோ தற்போது கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. எடியூராப்பா தலைமையிலான ஆட்சியைக் கலைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் ஆளுநர் வாஜுபாய் வாலாவைச் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version