சென்னை வண்ணாரப்பேட்டையில் துரித உணவகத்தில் சாப்பிட்டு விட்டு, மது போதையில் கடை ஊழியர்களை சரமாரியாக தாக்கிய மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துரித உணவக கடை ஊழியர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதற்கான காரணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால், ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் ராடை எடுத்து கடை ஊழியர்களுக்கு லாடம் கட்டிய காட்சி தான் இது.
சென்னை வண்ணாரப்பேட்டை ஜே.பி கோயில் தெருவில், கடந்த 22 வருடமாக துரித உணவகம் ஒன்றை ராஜேந்திரன் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு சாப்பிட வந்த இருவர், சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் வெளியே சென்று உள்ளனர்.
அப்போது வெளியே சென்ற நபர்களை பார்த்து, கடையில் வேலை செய்த ஊழியர் காசு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து மது போதையில் இருந்த இருவரும், என்னிடமே காசு கேட்கிறாயா என தகராறு செய்துவிட்டு சென்றுள்ளனர். இதனால் கடையில் ஏற்பட்ட பரபரப்பு அடங்காத சிறிது நேரத்திலேயே, வெளியே சென்ற இருவரும், மீண்டும் ஆறு நபர்களுடன் திரும்பி வந்து கடையில் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது கடையில் வேலை செய்த கார்த்திக், வேல்முருகன் உள்ளிட்டோரை போதை ஆசாமிகள், தாங்கள் கொண்டு வந்த இரும்பு ராடால் சரமாரியாக தாக்கி, மண்டை, வாய் ஆகியவற்றை உடைத்து உள்ளனர். அப்போது கடையினுள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் அலறியடித்துக் கொண்டு கடையின் கிட்சனுக்குள் புகுந்து தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.
ஆத்திரம் தணியாத போதை ஆசாமிகள் கடையில் உள்ள சாமான்கள், டைனிங் டேபிள் ஆகியவைகளை உடைத்து விட்டு, ஒன்றுமே நடக்காதது போல கேஷுவலாக வெளியே சென்றனர். இதனையடுத்து தாக்குதலில் படுகாயமடைந்த ஊழியர்களான வேல்முருகன், கார்த்திக் ஆகியோர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார்,
சிசிடிவி காட்சிகளை கொண்டு தாக்குதல் நடத்திய போதை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால், போதை ஆசாமிகள் ஹோட்டலை சூரையாடிய சம்பவம் வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post