40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்திலிருந்து வெளி வரும் அத்திவரதரை தரிசனம் செய்ய இந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் நோக்கி பக்தியோடு படையெடுத்தனர்.
இதற்கு முன்பு 1979ஆம் ஆண்டு அத்திவரதர் காட்சி தந்தபோது, சுமார் 10 லட்சம் பக்தர்கள் வந்து தரிசித்து சென்றதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த முறை தொழில்நுட்ப வளர்ச்சியால், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களும் அத்திவரதர் வைபவம் குறித்து விரிவாக செய்தி வெளியிட்டதால், அவரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் காஞ்சிபுரத்திற்கு 3.59 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என மாநில சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட்டில் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை சுமார் 71 லட்சம் ஆகும் .ஆனால் இந்த ஆண்டு அத்திவரதரை காண சுமார் 5 கோடியே 82 லட்சம் பயணிகள் காஞ்சிபுரத்திற்கு வந்துள்ளனர்.இது கடந்த ஆண்டை விட 4 கோடியே 19 லட்சம் அதிகமாகும்.
மொத்த உள்நாட்டு சுற்றுலா பயணிகளில் 25 % பயணிகள் தமிழகத்திற்கு ஜூலை , ஆகஸ்ட் மாதங்களில் வந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.இதற்கு அத்திவரதர் தரிசனமே காரணம் என்றும் சுற்றுலாத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அனந்தசரஸ் குளத்தில் பள்ளிக்கொண்டிருக்கும் அத்திவரதரை, இனி 2059 ஆம் ஆண்டு தான் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.