இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றபோதிலும் அதன் முதன்மை மதமாகப் பாவிக்கப்படுவது கிரிக்கெட். கிரிக்கெட் மோகத்தினால் நம்மவர்கள் பிற விளையாட்டுகளின் மீது ஆர்வமின்றி, விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் மட்டும்தான் என்ற மனப்போக்கில் இருக்கின்றனர். அதனால் இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியை நம்மில் சிலர் மறந்திருக்கவே கூடும். முக்கியமாக, கிரிக்கெட்டினைத் தான் நம்மவர்கள் தேசிய விளையாட்டாக கருதி வருகிறார்கள். இது ஒருபுறம் இருக்க தற்போது சென்னையில் நடைபெற்று வரும் ஏழாவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் இந்திய ஹாக்கி ஆடவர் அணியினர் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். அதனைப் பற்றி விரிவாக காண்போம்.
இந்தியா – பாகிஸ்தான்..!
நேற்று ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் “ஹாட்ரிக்” வெற்றி பெற்றுள்ளது இந்தியா. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானை 4-0 என்ற புள்ளிக் கணக்கில் சாய்த்து மாபெரும் வெற்றியைப் பெற்றது. சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் உலக தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் இந்தியா 16 வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தானை சந்தித்தது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை இந்தப் போட்டியில் டிரா செய்திருந்தால் அரையிறுதிக்கு செல்லலாம் என்ற நப்பாசையில் இருந்தது. ஆனால் அந்தக் கனவிற்கு பாகிஸ்தான் முட்டுக்கட்டையிட்டது.
பாகிஸ்தானை வீழ்ந்திய இந்தியா..!
போட்டித் துவங்கிய முதல் நிமிடத்தில் பாகிஸ்தான் தரப்பில் கோல் அடிக்கப்பட்டது. இதை எதிர்த்து இந்திய அணியினர் ‘ரெபரல்’ செய்தனர். முடிவில் கோல் இல்லை என அறிவித்து, பெனால்டி வாய்ப்பானது வழங்க, அதனை இந்தியாவின் கோல்கீப்பர் கிருஷன் பதக் பதட்டமில்லாமல் தடுத்து நிறுத்தினார். அதேபோல இந்தியாவின் செல்வம் கார்த்திக் அடித்த பந்தை பாகிஸ்தானின் கோல் கீப்பர் அக்மல் ஹூசைன் 13 வது நிமிட வாக்கில் தடுத்தார். இத்தருணத்தில் ஆட்டத்தில் அனல் பறக்க துவங்கியது. இதனால் களத்திலும் ஆக்ரோஷம் வெளிப்பட்டது. 14 வது நிமிடத்தில் பாகிஸ்தான் வீரர் பூட்டா உமர் ஆக்ரோஷ ஆட்டத்தினை வெளிப்படுத்தியதால், ‘கிரீன் கார்டு’ பெற்று வெளியேற, இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. இதனை சரியாக இந்திய அணியினர் பயன்படுத்தினார்கள். இந்தியக் கேப்டன் ஹர்மன் பிரீத் சிங் இந்த வாய்ப்பினை கோலாக மாற்றி அசத்தினார். இதற்கு பிறகு பாகிஸ்தான் தரப்பில் அடுத்தடுத்து தாக்குதல்கள் தொடங்கப்பட்டது. இருந்தாலும் இந்தியாவின் கடப்பாரை கோல் ஏரியாவை தகர்க்க முடியவில்லை. 20வது நிமிடம் இந்தியாவின் கார்த்திக் கிறீன் கார்டு பெற்று இரண்டு நிமிடம் வெளியேறினார். 23 வது நிமிடம் இந்தியாவிற்கு மீண்டுமொரு பெனால்டி வாய்ப்பு கிடைக்க அதனையும் கோலாக மாற்றினார் ஹர்மன்பிரீத் சிங். அதற்கு பிறகு போட்டியின் 36 வது நிமிடம் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பினை ஜூக்ராஜ் சிங் கோலாக மாற்றினார். பிறகு 55 வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் கோல் அடித்து அசத்த இந்திய அணி 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதனால் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஹாட்ரிக் வெற்றியினை பதிவு செய்தது.
இந்தியா, மலேசியா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர். இந்தியா மற்றும் ஜப்பானுக்கும், மலேசியா மற்றும் தென்கொரியாவிற்கும் இடையே நாளை அரையிறுதி ஆட்டம் நடைபெற உள்ளது.