இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக ஆடி 144 ரன்களை விளாசினார்.
உலகக் கோப்பை ஒருநாள் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தெம்புடன் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிவுடனான பாரம்பரியமாக நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் தொடரை எதிர்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய கேமரூன் பான்கிராப்ட் 8 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அதிரடி வீரர் வார்னர் நிலைத்து ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 ரன்களுடன் பிராட் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். உஸ்மான் கவாஜாவும் 13 ரன்களுடன் வெளியேற, 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் என்ற நெருக்கடியான நிலைக்கு ஆஸ்திரேலியோ தள்ளப்பட்டது.
பின்னர் ஸ்டீவ் ஸ்மித்- டிராவிஸ் ஹெட் ஆகியோர் இணைந்து நிதானமாக ஆடி அணியின் ரன்னை உயர்த்தினர். அடுத்தடுத்த வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற மறுமுனையில் ஸ்மித் மட்டுமே 139 பந்துகளில் 66 ரன்களை சேர்த்தார். தேநீர் இடைவேளையின் போது 55 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களுடன் ஆஸ்திரேலியா தடுமாற்றமான நிலையில் இருந்தது. பின்னர் திடீரென மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது.
மழை நின்ற பின் ஆட்டம் மீண்டும் தொடங்கிய நிலையில், ஸ்மித் அதிரடியாக ஆடி 219 பந்துகளில் 144 ரன்களை விளாசி, ஆட்டமிழந்தார். ஆட்ட நேர முடிவில் 80.4 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர், முதலாவது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது.
Discussion about this post