இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரிடம் மோசமாக நடந்து கொண்ட ஆஸ்திரேலியா ரசிகர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணி ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி வெற்றுப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனி ஒருவனாக நின்று இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார் பென் பென் ஸ்டோக்ஸ். இதனால், இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், 4-வது ஆஷஸ் டெஸ்ட் தொடர், ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம் அடித்தார். இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
இந்த போட்டியின் போது, மைதானத்தின் எல்லைக்கோடு பகுதியில் ஜோப்ரா ஆர்ச்சர் பீல்டீங் செய்து கொண்டிருந்தார். அப்போது, மைதானத்தில் இருந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர், ஜோப்ரா ஆர்ச்சரை பெயரை அழைத்து, உங்கள் பாஸ்போர்ட்டை எங்களுக்கு காட்டுங்கள் என்று கூச்சலிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அருகாமையில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் மைதான அதிகாரிகளிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.