ஆஷஸ் டெஸ்ட் தொடரை பார்க்க குப்பை அள்ளிய 12 வயது சிறுவன்

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணி ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. இந்த நிலையில், 4-வது ஆஷஸ் டெஸ்ட் தொடர் மான்செஸ்ட்ரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம் அடித்தார். இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

இந்த நிலையில், பழமையான ஆஷஸ் டெஸ்ட் தொடரை நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற 12 வயது சிறுவனின் கனவு நிறைவேறியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேக்ஸ் என்ற சிறுவன், கடைசியாக 2015 ஆம் ஆண்டு அவரது சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியை நேரில் பார்த்துள்ளான்.

இந்நிலையில், கிரிக்கெட்டில் பிரபலமான ஆஷஸ் டெஸ்ட் தொடரை நேரில் காண வேண்டும் என்று மேக்ஸ், தனது தந்தையிடம் விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஆனால், இங்கிலாந்து செல்வது அவ்வளவு எளிது அல்ல என்று அவரது தந்தை கூறியுள்ளார். மேலும், பணம் கிடைத்தவுடன் அழைத்து செல்வதாக உறுதி அளித்துள்ளார்.

இதற்காக, அண்டை வீடுகளின் குப்பைகளை அள்ளினால் வாரந்தோறும் 1 டாலர் கிடைக்கும் என்பதால் தனது தாயாருடன் சேர்ந்து 4 வருடமாக குப்பை அள்ளி வந்தார். இறுதியில், தான் சேமித்த பணத்தை தனது தந்தையிடம் கொடுத்து, இப்போது போகலாமா என்று கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடந்து வரும் ஆஷஸ் போட்டிக்கு தனது குடும்பத்தை அழைத்து வந்ததன் மூலம் மேக்ஸ் கனவு நிறைவேறியுள்ளது.

மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள், கையெழுத்திட்ட ஜெர்சியை மேக்ஸ்க்கு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

Exit mobile version