செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பண மோசடி செய்ய முடியமா?
உலகையே ஆளப் போகிறது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் என்று நம்மில் பலர் பேசி வந்தாலும், அதனால் சில விபரீதங்களும் ஏற்படுவதை நாம் கருத்தில்கொண்டுதான் ஆக வேண்டும். ஒரு பொருளோ அல்லது செயலியோ சந்தைக்குள் வந்துவிட்டால் மக்களை கவர்ந்திழுக்கக் கூடிய விளம்பரங்களையும், விளம்பரத்தூதராக நட்சத்திரங்களையும் நடிக்கவைத்து மூளைச் சலவை செய்வதும் உண்டு. அது பெரும் நிறுவனங்களுக்கே வாய்த்த ஒன்று. பின்னாளில் மக்கள் அந்த மோகவலைக்குள் விழிந்து தங்களை மீட்டெடுக்க சிரமப்படுவர். அப்படி இப்போது அனைவரும் சிக்கியிருப்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திடம்தான்.
இன்றைய நவீனச் சூழலில் நாம் அனைத்துவித புதிய தொழில்நுட்பங்களுக்கும் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம். ஒரு செயலை எளிதாக செய்து முடிப்பதனை நாம் விரும்பும் ஆளாக இருக்கிறோம். அதனை ஒரு இயந்திரமோ அல்லது செயலியோ எளிதாக முடித்துக்கொடுத்தால் அதனை அதிகம் பயன்படுத்துகிறோம். அப்படி நம் தினசரி வாழ்வுக்குள் ஏகப்பட்ட இயந்திரங்களும், நவீன கேஜட்களும் புழங்குகின்றன. அந்த வரிசையில் சமீபத்தில் வந்து ஒட்டிக்கொண்டதுதான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். எந்தவொரு புதிய கண்டுபிடிப்பும் நமக்கு முதலில் வாகாக பயன்பட்டாலும், பின்னாட்களில்தான் அதன் முழு சுயரூபமும், பின்விளைவுகளும் தெரியவரும்.
செயற்கைத் தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட சம்பவங்கள்..!
அமெரிக்காவில் ராபர்ட் வில்லியம்ஸ் என்ற கறுப்பினத்தவருக்கு இந்த செயற்கை தொழில்நுட்பம் மூலம் ஒரு பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. அதாவது, அவர் கடை ஒன்றில் மேனேஜராக பணியாற்றி வந்தார். அந்தக் கடையில் திருடி போய் இருக்கிறது. இதனை காவல்துறையினர் விசாரித்தனர். அவர்கள் சிசிடிவி-யினை பரிசோதிக்கும்போது, செயற்கை தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்தனர். அதில் திருடும் உருவம் ராபர்ட் உருவம் போல் இருந்துள்ளது. இதனால் சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்தனர். ஆனால் திருடு நடைபெற்ற சமயம் அவர் வீட்டில் இருந்துள்ளார். இதனைப் பின்னர் அறிந்த காவல்துறை, தங்களின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட குளறுபடிதான் காரணம் என்று மன்னிப்புக் கேட்டு, ராபர்ட்டினை விடுதல செய்தனர்.
கேராளாவில் கோழிக்கோட்டில் ராதாகிருஷ்ணன் என்ற நபர் வசித்து வருகிறார். அவருடைய வாட்சப் எண்ணிற்கு வீடியோ கால் ஒன்று வந்துள்ளது. அதில் அவருடன் பணியாற்றும் ஆந்திராவைச் சேர்ந்த நண்பரின் உருவம் தெரிந்துள்ளது. அதில் அவர் மருத்தவமனையில் இருக்கும் உறவினர் ஒருவருக்கு உதவ வேண்டும் என்று கூறி நாற்பதாயிரம் ரூபாய் கேட்டுள்ளார். உடனே கூகுள் பே மூலம் நாற்பதாயிரம் ரூபாயினை ராதாகிருஷ்ணனும் அனுப்பியுள்ளார். உடனே மேலும் ஒரு முப்பதாயிரம் ரூபாய் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் ராதாகிருஷ்ணனுக்கு சந்தேகம் எழ, அங்குள்ள சைபர் கிரைம் காவல்துறையினரிடத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் காவல்துறையினர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளனர் என்பதை கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே இதே போல சீனாவில் நண்பரின் உருவத்துடன் கூடிய வீடியோ கால் மூலம் 4.3 மில்லியன் யுவான் பணம் மோசடி நடைபெற்றது.
மக்களே உஷாராக இருங்கள்…!
மேற்சொன்ன மோசடிகள் தமிழகத்திலும் தற்போது நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளதால், இது போன்ற மோசடிகளில் யாரிஉம் ஏமாந்து விட வேண்டம் என்று தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் கூடுதல் டி.ஜி.பி சஞ்சய் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது,
ஆன்லைனில் நீங்கள் உங்களின் தனிப்பட்ட தகவல்களை பகிந்து கொள்வதின் அளவைக் கட்டுப்படுத்துங்கள். மேலும் உங்களின் தகவலுக்கான் அணுகலைக் கட்டுபடுத்த சமூக ஊடகத் தளங்களில் உள்ள தனியுரிமை அமைப்புகளைச் சரி செய்யவும் என்று கூறினார். மேலும் நீங்கள் இது போன்ற வீடியோ கால் மோசடிக்கும் உடனடியாக, “சைபர் க்ரைம்” கட்டணமில்லாத உதவி எண் 1930-ஐப் பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம். மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் டிஜிபி அவர்கள் தெரிவித்துள்ளார். மக்களே! இனிமேல் கொஞ்சம் உஷாராக இருந்து கொள்ளுங்கள்.
Discussion about this post