தீபாவளிக்காக தமிழக அரசு பேருந்துகள் மூலமாக சென்னையில் இருந்து 7 லட்சம் பேர் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கும், பிற மாவட்டங்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்லக்கூடிய பயணிகளுடைய போக்குவரத்து வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கியது.
கடந்த 4 நாட்களில் சென்னையில் இருந்து தமிழக அரசால் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் மட்டும் சுமார் 7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். அதேபோன்று, சென்னையில் இருந்து ஆம்னி பஸ்கள், ரயில்கள் மூலமாகவும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி முறைகேடுகளில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெர்மிட் இல்லாமல் இயக்கப்பட்ட 4 பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோன்று கூடுதல் கட்டணம் வசூலித்து முறைகேடுகளில் ஈடுபட்ட ஆம்னி பஸ் நிறுவனங்களிடமும் 31 லட்சம் ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டது.
இதனிடையே தீபாவளி பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக இன்று இரவிலிருந்து 4ஆயிரத்து 207 பேருந்துகளும், பிற மாவட்டங்களில் இருந்து 7 ஆயிரத்து 635 பேருந்துகளும் என மொத்தம் 11ஆயிரத்து 842 பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.