ஒருமுறை நம் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்காவில் ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்திற்கு உரையாற்ற சென்றிருந்தார். அங்குள்ள அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், நம்மவரின் உருவத்தைக் கண்டு, இவரெல்லாம் யார்? இவருக்கு என்ன தெரியும்? என்கிற முன்முடிவில், அவரை அழைத்தார். ஹலோ மிஸ்டர் வாட் இஸ் யுவர் கல்ச்சர் என்று ஆங்கிலத்தில் அந்த அமெரிக்கர் கேள்வி எழுப்ப, அதற்கு அக்ரிகல்ச்சர் என்று பதிலுரைத்து அமெரிக்கரை வாயடைக்கச் செய்தார் அந்த மனிதர். அவர் வேறு யாரும் அல்ல, தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் ஆட்சிக்கு அச்சாணி அமைத்துக் கொடுத்தவர், மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றியவர், இந்தித் திணிப்பை எதிர்த்து இருமொழிக்கொள்கைக்கி வித்திட்டவர், அவர்தான் பேரறிஞர் அண்ணா.
அண்ணாவின் இளமைப்பருவம்
காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை என்று அழைக்கப்படும் சி.என். அண்ணாதுரை அவர்கள், காஞ்சிபுரத்தில் எளிய நெசவாளக் குடும்பத்தில் 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் நடராஜன் – பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பினை முடித்த அண்ணா, மேற்படிப்பிற்காக பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார். அதுவரை சராசரி மாணவராக இருந்த அண்ணாவிற்கு கல்லூரி வாழ்க்கைதான் திருப்புமுனை தந்தது. அவர் கல்லூரியில் சந்தித்த ஆங்கிலப் பேராசிரியர் வரதராஜன் நீதிக்கட்சியில் அங்கம் வகித்தவர். அவரின் மூலம் அரசியல் கருத்துகளை அதிகம் உள்வாங்கினார் அண்ணா. மோசூர் கந்தசாமி மற்றும் மணி திருநாவுக்கரசு போன்ற பேராசிரியர்கள்தான் அண்ணாவிற்கு சங்கத்தமிழினை அதிகம் கற்றுக் கொடுத்தனர். அதன் பலாபலனே அண்ணாவின் மேடைத் தமிழுக்கு அடித்தளம் இட்டது. பின்னர் பி.ஏ ஆனர்ஸ் படிப்பினை அண்ணா கல்லூரியில் பயின்றார். கல்லூரியில் தீவிரமான படிப்பாளியாக இருந்த அண்ணா, நூலகத்திலேயே தன் நேரத்தை அதிகளவு செலவிட்டார். 1931 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர் பேரவையின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் காஞ்சிபுரம் நகராட்சியில் ஆறு மாதங்களாக எழுத்தர் பணி செய்தார். பிறகு சென்னை கோவிந்த நாயக்கப்பன் நடுநிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வந்தார்.
பெரியாரும் அண்ணாவும்!
பிராமணர் இல்லாதோர் இயக்க அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதே, அண்ணாவின் விருப்பச் செயல்பாடாக இருந்தது. அப்படி அவர் தன்னை இணைத்துக்கொண்டது நீதிக்கட்சியில்தான். ஆனால் அண்னா நீதிக்கட்சியில் இணைந்த காலகட்டத்தில் நீதிக்கட்சியின் வீழ்ச்சித் தொடங்கியிருந்தது. மக்களும் நீதிக்கட்சியின் செயல்பாடுகளை பெரிதாக ஏற்றுக்கொள்ளாத காலகட்டம் அது. ஆனால் அண்ணா இறுதியாக சென்று சேர்ந்த இடம் தந்தை பெரியார் தான். அவரைத் தான் தனது ஆஸ்தான தலைவராக ஏற்றுக்கொண்டார். கடவுள் மறுப்பு, சாதி பாகுபாடுகளை கலைதல் என்று மேடையிலேயே கடின வார்த்தைகளை உதிர்க்கக்கூடியவர் பெரியார். பொதுவாழ்வில் ஈடுபடுவதுதான் தனக்கு விருப்பம் என்பதை உணர்ந்து, பெரியோருடனே தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டார்.
பெரியாரின் தளபதியாக அண்ணா!
1937 ஆம் ஆண்டு, ஈரோடு சென்ற அண்ணா அங்கு அண்ணாவின் குடியரசு மற்றும் விடுதலை நாளிதழ்களின் துணை ஆசிரியராக அறுபது ரூபாய் சம்பளத்திற்கு பணியாற்றினார். அன்றைக்கு வெறும் 28 வயதே அண்ணாவிற்கு நிரம்பியிருந்தது. அவரின் ஆளுமைப் பண்பினை கருத்தில் கொண்டு, அதே ஆண்டும் சுயமரியாதை மாநாட்டை தலைமை ஏற்று நடத்த அண்ணாவிற்கு ஒரு வாய்ப்பினை கொடுத்தார் தந்தை பெரியார். 1938 ஆம் ஆண்டு ஆட்சிக் கட்டிலில் இருந்த ராஜாஜி, ஆறு முதல் எட்டு வரை உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு இந்தி மொழியைக் கட்டாயம் ஆக்கினார். இதனைப் பெரியாரும் அண்ணாவும் கடுமையாக எதிர்த்தனர். இதில் அண்ணாவிற்கு 4 மாதங்கள் சிறை தண்டனையும், பெரியாருக்கு ஒரு வருடம் சிறை தண்டனையும் கிடைத்தது. இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில்தான் “தமிழ்நாடு தமிழர்க்கே” என்ற கோஷத்தை பெரியார் முன்வைத்தார். சிறைவாசத்தில் பெரியார் இருக்கும்போது நீதிக்கட்சியின் தலைவர் பதவி அவருக்கு கிடைத்தது. பின்னர் 1944 ஆம் ஆண்டு தனது சுயமரியாதைக் கழகத்தையும், நீதிக்கட்சியினையும் பெரியார் ஒன்றாக இணைத்து, திராவிடர் கழகம் என்று மாற்றினார். திராவிடர் கழகத்தின் தளபதியாக அன்றைக்கு அண்ணா செயல்பட்டார்.
தேர்தல் அரசியலில் அண்ணா!
தேர்தல் அரசியலில் ஈடுபடாமல் இருந்த திராவிடர் கழகம் சமுதாயப் பணியிலே தீவிரமாக இயங்கியது. அச்சமயம் பெரியாருடன் கருத்து முரண் ஏற்பட்டு, 1949 செப்டம்பர் 17 பெரியாரின் பிறந்தநாளன்று திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தார் அறிஞர் அண்ணா. அப்போது அவரின் கொள்கை “ஒன்றே குலம் ஒருவனே தேவன்”. இது அன்றைய பெரியாரிஸ்டுகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பெரியாரே விமர்சித்தாலும், அவர் என் தலைவர் அவரை நான் விமர்சிக்க மாட்டேன் என்கிற கண்ணியத்தை கடைபிடித்தார் அண்ணா. கழகத் தோழர்கள் யாராவது பெரியாரை மேடையில் திட்டி பேசினால், உடனடியாக அவர்களிடம் இருந்து மைக் பிடுங்கப்படும். திமுக உருவாக்கப்பட்டு தேர்தல் அரசியலை சந்திக்காமல்தான் இருந்தது. ஆனால் 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது தேர்தலில் போட்டியிட்டது. 15 சீட்டுகளை அன்றைய திமுக வென்றது. அண்ணாவும் சட்டமன்றத்திற்கு தகுதியானர். பின்னர் அடுத்த தேர்தலில் ஐம்பது தொகுதிகளில் வென்றது. ஆனால் அண்ணா தோல்வியை சந்தித்தார். இருப்பினும் மாநிலங்களவை உறுப்பினராக எம்.எல்.ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முதல்வராக அண்ணா!
தமிழகத்தில் மீண்டும் இந்தி திணிப்பானது தலைதூக்கியது. அப்போது அதனை லாவகமாக கைகொண்டார் அண்ணா. மாணவர்கள் சக்தியினை ஒன்று திரட்டி, இந்தி திணிப்பிற்கு எதிராக போராடினார். பிறகு போராட்டத்தில் வன்முறை வெடிக்க, அதனை கைவிட்டார். இந்தி எதிர்ப்பு போராட்டம் மக்களிடையே திமுகவிற்கு என்று ஒரு பெயரை பெற்றுக் கொடுத்துவிட்டது. இங்கு இருந்துதான் அண்ணாவின் வெற்றி தொடங்கியது. 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு அண்ணா தலைமையிலான திமுக மாபெரும் வெற்றி கண்டது. இருமொழிக்கொள்கை, தமிழ்நாடு பெயர் மாற்றம், இலவச ஒருபடி அரிசி என்று எண்ணற்ற பல திட்டங்களை அண்ணா அவர்கள் அறிமுகப்படுத்தினார். இப்படி மக்கள் பணிக்கே முன்னுரிமை கொடுத்த அண்ணா பிப்ரவரி 3 ஆம் தேதி உடல்நிலைக்குறைவால் 1969 ஆண்டு இயற்கை எய்தினார். அவரின் இறுதி ஊர்வலத்தில் 1.5 கோடி தொண்டர்கள் கலந்துகொண்டனர். இதுவரை இந்த இறுதி ஊர்வலம் தான் கின்னஸ் சாதனையாக கருதப்படுகிறது. அந்த அளவிற்கு மக்கள் பலத்தைக் கொண்டிருந்தார் அண்ணா.