கருக்கலைப்புக்கான கால வரம்பை 24 வாரமாக அதிகரிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கருக்கலைப்பு செய்வதற்கான காலவரம்பை தற்போதுள்ள 20 வாரங்களிலிருந்து, 24 வாரங்களாக உயர்த்தும் சட்டத்திருத்த மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த மசோதா நாடாளுமன்றத்தில், வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும், இது பெண்களின் கர்ப்பத்தை பாதுகாப்பாக நிலை நிறுத்துவதை உறுதி செய்யும் எனவும் கூறினார். மேலும், இந்த மசோதாவில் உள்ள திருத்த விதிகளில், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், தகாத உறவினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள், சிறுமியர் போன்ற பெண்களும் அடங்குவார்கள் என்றும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.