எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒரு கொள்ளையன் கைது

சென்னையில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் கைவரிசை காட்டிவிட்டு ஹரியானாவில் பதுங்கி இருந்த மேலும் ஒரு கொள்ளையனை தனிப்படை போலீசார் சுற்றி வலைத்து கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து இந்த கொள்ளை சம்பவத்தில் கைதாகி உள்ளவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 14 இடங்களில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் டெபாசிட் இயந்திரங்களில் இருந்து நூதன முறையில் பல லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஹரியானாவில் முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார், முக்கிய கொள்ளையன் அமீர் அர்ஷை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட அமீரின் கூட்டாளின் அடுத்தடுத்து சிக்கிவருகின்றனர். இந்த நிலையில், கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய வீரேந்தர் ராவத் என்கிற இரண்டாவது கொள்ளையனை நேற்று முன் தினம் தனிப்படை கைது செய்தது. அவனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர். இதனிடையே, ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட மேலும் ஒரு கொள்ளையன் தற்போது தனிப்படை வசம் சிக்கி இருக்கிறார். ஹரியானாவில் பதுங்கி இருந்த உசேனை, தனிப்படை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சென்னை அழைத்துவரும் ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கைதான உசேனிடம் இருந்து கொள்ளைக்கு பயன்படுத்திய அரியானா பதிவெண் கொண்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட 8 பேரில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 5 பேரை கைது செய்ய ஹரியானாவில் முகாமிட்டுள்ள தனிப்படை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.

 

Exit mobile version