போக்குவரத்து துறைகளில் தொடரும் ஊழியர்கள் பற்றாக்குறை நடவடிக்கை மேற்கொள்ளாத திமுக அரசு, கூடுதல் நேர பணிச்சுமையால் அரசு பேருந்து ஓட்டுநர்களும் நடத்துனர்களும் மனஉளைச்சலுக்கு தள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திமுக அரசு போக்குவரத்து துறை தொழிலாளர்கள் நலன் சார்ந்து நடவடிக்கை எடுக்க தவறினால் அதிமுக கழக பொதுச்செயலாளர் அனுமதியோடு மாபெரும் போராட்டத்தை சந்திக்க நேரிடும் என அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் பணிக்காலம் முடிந்து அடுத்த மாத இறுதிக்குள் ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக அரசு பேருந்துகளில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறை காரணமாக நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்று தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியுடைய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பிற்காக அரசு அலுவலகங்களில் விண்ணப்பித்த காத்திருக்கும் நிலையில் திமுக அரசு தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த முறையில் ஊழியர்களை பணி நியமனம் செய்ய முடிவெடுத்தது.
இதற்கு திமுகவை சேர்ந்த தொழிற் சங்கங்களே எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து ஒப்பந்த முறையில் தனியா நிறுவனங்கள் வாயிலாக ஊழியர்களை பணி நியமனம் செய்வதை தற்காலிகமாக நிறுத்தியது திமுக அரசு.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் குறைந்த அளவே பேருந்துகள் செயல்பட்டு வருவதைத் தொடர்ந்து வேலைக்குச் செல்லக் கூடியவர்களும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வரும் நிலையில் இரவு நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படாதால் பணி முடிந்து வீடு திரும்பும் பெண்கள் உட்பட பல அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் வருகின்ற ஜூலை மாதத்திற்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போக்குவரத்து துறையைச் சேர்ந்த ஊழியர்கள் பெற்றால் தற்போது பணிபுரிந்து வரக்கூடிய ஊழியர்களின் பணிசுமை அதிகரிக்கும் என்றும் கூடுதல் நேரம் பணியாற்றுவதால் மன உளைச்சலுக்கு தள்ளப்படுவார்கள் என்றும் அரசு பேருந்து ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் கூறுகையில் :-தொடர்ந்து திமுக ஆட்சியில் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுவதாகவும், போக்குவரத்து துறை நஷ்டத்தில் செயல்பட விட்டுள்ளனர் என்றும், தொடர்ந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் என பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், பணி சுமை காரணமாக ஊழியர்கள் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள் என்றும் பணிக்காலம் முடிந்த பின்னர் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் தொகையும் நிறுத்தப்பட்டு வெறுங்கையோடு தான் திரும்புவதாகவும், தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து அவ்வபோது பேச்சு வார்த்தை நடத்துவதாக தெரிவிக்கும் திமுக அரசு திமுக சார்ந்த தொழிற்சங்கங்களை மட்டும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விடுவதாகவும் பிற கட்சி சார்ந்த சங்கங்களையோ பொதுச் சங்கங்களையோ அழைத்துப் பேசப்படுவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தொழிலாளர்கள் நலன் சார்ந்து காலி இடங்களை நிரப்பி திமுக அரசு நடவடிக்கை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தினால் அதிமுக கழக பொதுச்செயலாளரும் எதிர் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் அனுமதியோடு மாபெரும் போராட்டத்தை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.