இனி ஆண்ட்ராய்டு போன்களிலும் ChatGPT! ஓபனாக சொல்லிய Open AI..!

சாட் ஜிபிடி என்று அனைவராலும் அறியப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை ஆண்ட்ராய்டு செல்போன்களில் பயன்படுத்துவதற்கான ஆண்ட்ராய்டு பதிப்பினை தற்போது ஓபன் ஏஐ நிறுவனம் வடிவமைத்துள்ளது. அதன்படி இனி ஆண்ட்ராய்டு செல்போன்களிலும் சாட் ஜிபிடி-யினைப் பயன்படுத்தலாம் என்கிற செய்தியை ஓபன் ஏஐ நிறுவனம் செவ்வாய்க் கிழமை இரவு தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.

ஆண்ட்ராய்டுகளில் அறிமுகமாகும் சாட் ஜிபிடி!

 இந்தியா, வங்கதேசம், அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய  நாடுகளில் சாட் ஜிபிடியின் ஆண்டாராய்டு பதிப்பானது தற்போது கிடைக்கப் பெறுவதாக Open AI நிறுவனம்  அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தது. வரும் வாரங்களில் இந்த பதிப்பு மேலும் பல நாடுகளில் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. முதன் முதலில் ஐஃபோன் பயன்பாட்டாளர்களுக்காக இந்த செயலியானது இரண்டு மாதங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. தற்போது இதன் தேவை அறிந்து ஆண்ட்ராய்டு செல்போன்களிலும் இந்த செயலியானது அறிமுகப்படுத்த வேண்டும் என்று பல தரப்பு வாடிக்கையாளர்கள் கோரிக்கைவிடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து இந்த செயலியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை நிறுவும் விதமாக இந்த செயலியின் ஆண்டாராய்டு பதிப்பு கடந்த ஜூலை 21 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனை கூகுள் ப்ளே ஸ்டோரில் பெறுவதற்கான நடைமுறையை கடந்த ஜூலை 25 ஆம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது.

எப்படி தரவிறக்கம் செய்வது?

    ஆண்ட்ராய்டு வகை செல்போன்களில் கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று சாட்ஜிபிடி என்று ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டும். பின் இலவசமாகவே தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தரவிறக்கம் செய்த பிறகு வலது புறத்தில் சாட் ஜிபிடி என்றும், கீழே ஓபன் ஏஐ என்றும் இருக்கும். இதன் மூலம் நாம் தரவிறக்கம் செய்தது உண்மையான செயலிதான் என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பிறகு இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

எல்லா ஆண்ட்ராய்டுகளிலும் செயல்படுமா?

      அனைத்து வித ஆண்ட்ராய்டு போன்களிலும் சாட் ஜிபிடி  செயலியானது வேலை செய்யுமா? என்றால், இல்லை என்றுதான் சொல்ல முடியும். அதற்கு காரணம் மார்ஷ்மெல்லோ 6.0 வகை ஆண்ட்ராய்டுகளிலும் அதற்கு பிந்தைய ஆண்ட்ராய்டுகளிலும்தான் இந்த சாட் ஜிபிடி செயலியானது செயல்படும். மற்ற எந்த வகை ஆண்ட்ராய்டுகளிலும் இந்த செயலியானது செயல்படாது. மெலும் சாட் ஜிபிடியானது அதன் பயனாளர்களை கண்காணிக்கக் கூடியது. இதனால் பயனாளர்களின் தனிப்பட்ட விஷயங்களும் வெளியே வந்துவிடும் என்கிற அச்சமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பயனர்களின் இருப்பிடத்தையும் முகவரியையும் இதர குறுஞ்செய்திகளையும் சேமித்து வைக்கும் இந்த சாட் ஜிபிடி. ஆனால், ஓபன் ஏஐ பயனர்களின் தகவல்களை ஒருபோதும் பிற நிறுவனங்களிடம் பகிரப்பட மாட்டாது என்று கூறியுள்ளது. அதேபோல தங்களைப் பற்றிய தரவுகளை பயனாளர்கள் நீக்க விரும்பினால் அது போலவே நீக்கிக்கொள்ளலாம் என்று ஓபன் ஏஐ நிறுவனம் கூறியுள்ளது.

     நவீனங்கள் வளர்ந்து வரும் இத்தகைய காலக்கட்டத்தில் சாட் ஜிபிடி தொழில்நுட்பமானது நம்மவர்களுக்கு ஒரு வரப் பிரசாதம் என்று சொல்லலாம். அந்த வகையில் நாம் செய்யக் கூடிய வேலையை இன்னொரு செயலியானது மிகவும் எளிமையாகி கொடுத்துவிட்டால், நமது வேலை மிச்சமல்லவா என்று தோன்றக்கூடும். அந்த ஒரு காரணத்திற்காகத்தான் இந்த சாட் ஜிபிடியை மக்கள் அனைவரும் அதிகம் விரும்புகின்றனர். ஆனால் இதன் பின் விளைவுகள் எப்படி இருக்கப் போகிறது என்பது வருங்கால தலைமுறைக்கே வெளிச்சம்!

Exit mobile version