அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி தூவி கொடூரம்! தமிழக பெண்களிடம் ஆந்திரபோலீசார் பாலியல் சித்ரவதை!

தமிழக போலீசார் உதவியுடன், வழக்கு விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று, குறவர் இன பெண்களிடம் பாலியல் வன்கொடுமையை ஆந்திர போலீசார் அரங்கேற்றியுள்ளனர். ஜெய்பீம் படம் பார்த்து கண்கலங்கிய ஸ்டாலின், நீதி கேட்கும் பெண்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது.

வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், இளகிய மனம் படைத்தோர் இந்தப் பெண்களின் குமுறலைக் கேட்க வேண்டாம்…. இப்படி எச்சரிக்கை போடும்படியாகத்தான் இருக்கிறது கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா மத்தூர் பகுதியில் உள்ள புலியாண்டிபட்டி கூட்ரோடு கிராமத்தை சேர்ந்த குறவர் இன மக்களான பூமதி உள்ளிட்டோரின் குமுறல்.

இப்படி ஆந்திர போலீசாரால் வழக்கு விசாரணை என்று அழைத்துச் செல்லப்பட்ட பூமதி தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து சொல்லச் சொல்ல கேட்போர்களின் கண்களில் கண்ணீர் வடிகிறது. மனது கொதிக்கிறது. இப்படியெல்லாமா காவல்துறை பெண்களிடம் கொடுமையில் ஈடுபடுவார்கள் என்றால், அதற்கு அடுத்து பூமதி கூறியவை அதிர்ச்சி ரகம்.

விசாரணை, ஜெய்பீம் என திரைப்படத்தில் வரும் காட்சிகளையும்,விட கொடூரமானவற்றை அரங்கேற்றி இருக்கிறார்கள் ஆந்திரமாநில காவல்துறையினர். தங்க நகை திருட்டு தொடர்பாக விசாரணை என்னும் பெயரில் பூமதி, பிரியா(எ)அருணா, ரேணுகா, சத்யா, கண்ணம்மாள் ஆகிய 5 பெண்கள், ஐயப்பன், தமிழரசன், ரமேஷ் என்ற 3 ஆண்கள், ஸ்ரீதர், ராகுல் என்ற 2 ஆண்குழந்தைகள் என 10 பேரை கடந்த மாதம் பிடித்து சென்று இத்தகைய அராஜகத்தை நிகழ்த்தி உள்ளனர்.

தாங்கள் சொல்லும் நகைக்கடையில் 4 கிலோ தங்க நகையை வாங்கித் தரவேண்டும் என ஆந்திர மாநிலம் சித்தூர் போலீசார் இவர்களை கொடூரமாகத் தாக்கி சொல்லொணா சித்ரவதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதோடு, பாலியல் வன்கொடுமைகளையும் அரங்கேற்றியுள்ளனர். இத்தகைய மனிதாபிமானமற்ற சம்பவங்களுக்கு தமிழக காவல்துறையும் உறுதுணையாக இருந்ததாகவே வேதனை தெரிவிக்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். ஆந்திர போலீசார் வந்தபோது உடன் மாத்தூர் போலீசாரும் வந்ததாக தெரிவிக்கிறார்கள். அவர்கள் மேலும், தங்களை தாக்கியது குறித்து ஆந்திர போலீசார் மீது புகார் அளித்தவர்களை ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்திபன் மிரட்டியதாகவும் தெரிவிக்கிறார்கள்.

இந்த கொடூரம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையிடம் புகார்
கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை டிஜிபி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் குறவர் என சங்கத்தினர் இணைந்து புகார் மனு கொடுத்துள்ளனர். இருமாநில காவல்துறையினர் சம்பந்தப்பட்டிருப்பதால் சிபிஐ இந்தப்புகார் குறித்து விசாரிக்க வேண்டு என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணிப்பூரை விடவும் கொடூரமாக பெண்கள் மீது தமிழக மற்றும் ஆந்திர காவல்துறை நடத்திய தாக்குதல்களுக்கு நீதி கேட்டு திரண்டுள்ளனர் பாதிக்கப்பட்டவர்கள். ஜெய்பீம் படத்தைப் பார்த்து கண்கலங்கிய முதல்வர் ஸ்டாலின், கண் எதிரே சாட்சியாக பல்வேறுகொடுமைகளை அனுபவித்து நிற்கும் இந்த பெண்களுக்கு எத்தகைய நீதியை வழங்கப் போகிறார்.

Exit mobile version