ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் அமராவதி திட்டத்திற்கு அம்மாநில அரசு பின்வாங்கியதால் உலக வங்கி கடனை ரத்து செய்துள்ளது. இதனால் அமராவதி திட்டம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிந்த நிலையில், ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரமாக அமராவதியை உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, உலக வங்கி நிதி உதவியுடன் 5 ஆயிரம் கோடி செலவில் புதிய தலைநகரை உருவாக்கும் பணியை கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கினார்.
அமராவதி திட்டத்திற்காக உலக வங்கியிடம் 2 ஆயிரத்து 65 கோடி கடன் கேட்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய சந்திரபாபு நாயுடு, உலகின் தலைசிறந்த 5 தலைநகரங்களில் ஒன்றாக அமராவதி இருக்கும் என்று உறுதி அளித்தார்.
ஆனால் சந்திரபாபு நாயுடு தேர்தலில் படுதோல்வி அடைந்தார். புதிய முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பேற்றதும் அமராவதி திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என தெரிகிறது. இதையடுத்து அமராவதி திட்டத்திற்கு கடன் வழங்குவதை உலக வங்கி ரத்து செய்து அதிகார பூர்வமாக அறிவித்தது. மாநில அரசு பின்வாங்கியதால் புதிய தலைநகர் திட்டம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post