விருத்தாசலம் அருகே அரசு தொடக்க பள்ளியின் முன்பு, தடையை மீறி திமுக தலைமை கழக பேச்சாளரின் இல்ல திருமணத்திற்காக பேனர் வைக்கப்பட்டதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த வயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை கழக பேச்சாளர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகள் திருமண விழாவிற்காக விருத்தாச்சலம் உளுந்தூர்பேட்டை சாலையில் ஆபத்தான முறையில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து, தமிழக அரசு பல்வேறு முறைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் திமுகவின் தலைமை கழக பேச்சாளர் கிருஷ்ணமூர்த்தி, தடையை மீறி, அரசுப்பள்ளி அருகாமையிலேயே மிகப் பிரம்மாண்டமாக பேனர் வைத்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்ட ரயில்வே சுரங்கபாதையில், அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதால் மின்கசிவு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து விருத்தாசலம் காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Discussion about this post