தனக்காக மட்டுமே வாழ்பவரை இந்த உலகம் எளிதில் மறந்து விடும். ஆனால் மக்களுக்காகவே வாழ்ந்தவரை யாராலும் மறக்கமுடியாது. அப்படிப்பட்ட அரசியலின் முடிவு பெறாத சகாப்தமும், சினிமாவின் மாபெரும் நட்சத்திரமும், பெண்களுக்கு முன்னுதாரணுமான புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த தொகுப்பை தற்போது பார்க்கலாம்…..
ஜெயலலிதாவின் வாழ்க்கைப் பயணம்
1981ல் அஇஅதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட அம்மாவின் செயல்பாடுகளால் அவருக்கு முதலில் சத்துணவுத் திட்டக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. 1983ல் அஇஅதிமுகவின் கொள்கைப்பரப்புச் செயலாளரானார் அம்மா. பின்னர் 1984ல் அஇஅதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராகும் சிறப்பையும் பெற்றார். நாடாளுமன்றத்தில் 1963ல் அறிஞர் அண்ணா அவர்கள் அமர்ந்திருந்த 185ஆவது இருக்கை அம்மாவுக்கு ஒதுக்கப்பட, நாடாளுமன்றத்தின் இரண்டாவது அண்ணாவாக மாறினார் அம்மா…
1987ல் எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடையும் சூழல் உண்டானது. அதனைத் திறம்பட சமாளித்து அதிமுகவைத் தன் தலைமையின் கீழ் ஒருங்கிணைத்து அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளரானார் …
1989ல் தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற சிறப்பைப் பெற்றார். 1991ல் தமிழகத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல்வர் என்ற சிறப்பைப் பெற்றார்.
தமிழக வரலாற்றில் மிக இளம் வயதில் முதல்வரான தலைவரும் அம்மா அவர்கள்தான். 1991ஆம் ஆண்டில் தமிழகத்தின் முதல்வராகும் போது அம்மா அவர்களின் வயது 43 ஆண்டு 4 மாதம்தான்.
தமிழக வரலாற்றில் மிக அதிகபட்சமாக 6 முறை முதல்வராகப் பதவி ஏற்ற ஒரே தலைவரும் புரட்சித்தலைவிதான். 2006ஆம் ஆண்டில் கருணாநிதி முதல்வரானபோது, தமிழகத்தில் ஒருவர் 5ஆவது முறை முதல்வரானதே சாதனையாக இருந்தது. அதை 2016ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி அன்று 6ஆவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றதன் மூலம் அம்மா அவர்கள் முறியடித்தார். மேலும் அந்தப் பதவியேற்பின் போதே, தமிழகத்தில் தொடர்ந்து இரண்டு முறைகள் ஆட்சியைக் கைப்பற்றிய ஒரே பெண் முதல்வர் என்ற சாதனையையும் அவர் தன் வசமாக்கினார்.
கடந்த 2016ஆம் ஆண்டில் அம்மா அவர்கள் மறைந்தபோது தமிழகத்தில் மிக அதிக காலம் முதல்வராக இருந்த பெண் என்ற சாதனை அவரிடம் இருந்தது. அவர் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்திருந்தால் இந்தியாவிலேயே மிக அதிக நாட்கள் முதல்வராக இருந்த பெண் என்ற சாதனையும் அவரது மணி மகுடத்தில் மற்றொரு மாணிக்கக் கல்லாக மிளிர்ந்திருக்கும், அதற்கு முன்பாகவே அந்த சாதனை மங்கையைக் காலம் காவு கொண்டது தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே பேரிழப்புதான்.
Discussion about this post