காலி நாற்காலிகளை பார்த்து அதிருப்தியடைந்த டிடிவி

அமமுகவினரின் அராஜகத்தால் பெண்கள் வெளியேறியதை அடுத்து ஆத்திரமடைந்த, டிடிவி தினகரன் பிரசாரத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்றார்.

அமமுக சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா திடலில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. குமரியில் அமமுகவிற்கு செல்வாக்கு இல்லாத நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் உள்பட ஏராளமானோர் வாகனங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

கூட்டம் தாமதமாக துவங்கப்பட்டதால் வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட பெண்கள் கூட்டத்தை விட்டு வெளியேறினர். அவர்களை மிரட்டி அமமுகவினர் மீண்டும் மைதானத்திற்கு செல்ல வலியுறுத்தினர். ஆனால், அதை பொருட்படுத்தாத பெண்கள் அங்கிருந்த நகைக்கடை மற்றும் மருத்துவமனைக்குள் தஞ்சமடைந்தனர். இதனால், அச்சம் அடைந்த உரிமையாளர்கள் கடைகளை மூடிவிட்டு சென்றனர்.

குடிமகன்களும் கூட்டத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்டதால், பெண்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதையடுத்து கூட்டத்திற்கு தாமதமாக வந்த தினகரன் பேச முற்பட்டார். குடிமகன்களின் அராஜகம், கூட்டத்திலிருந்து பெண்கள் வெளியேறியதையடுத்து, விரக்தி அடைந்த தினகரன், சில நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு வெளியேறினார்.

Exit mobile version