பாமரர்களின் பசித் தீர்க்கும் அம்மா உணவகம்..! திமுக ஆட்சியில் மூடப்படும் அவலம்!

திருப்பூர் மாநகராட்சியில் மக்களின் ஆதரவு பெற்ற அம்மா உணவகத்துக்கான பொருட்கள் வழங்குவதை காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பாதியாக குறைத்திருக்கிறது விடியா திமுக அரசு. இதனால் ஏழை, எளிய மக்கள் பசியாற முடியாமல் பரிதவித்து வருவது குறித்து விவரிக்கிறது, இந்த செய்தித் தொகுப்பு…

(அதிமுக) முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால், ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில், மலிவு விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகம் திட்டம் தொடங்கப்பட்டது. பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இத்திட்டத்தை ஆந்திரா, ராஜஸ்தான் போன்ற பல்வேறு மாநிலங்களும் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு செயல்படுத்தி வருகின்றன.

ஆட்சி மாற்றத்தால் அழிந்துவரும் அம்மா உணவகம்!

ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் அம்மா உணவக திட்டத்திற்கு மூடு விழா காண முனைப்பு காட்டியது விடியா அரசு. இதற்கு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் எதிர்ப்பை பதிவு செய்ததை தொடர்ந்து, திட்டத்தை முற்றிலும் மூடாமல், இருட்டடிப்பு செய்யும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளது விடியா அரசு. அதன்படி திருப்பூர் மாநகராட்சியில் செயல்பட்டு வரும் 10 அம்மா உணவகங்களை, படிப்படியாக அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது விடியா அரசு. திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த அம்மா உணவகம், விரிவாக்கப் பணியை காரணம் காட்டி அகற்றப்பட்டுள்ளதால், ஒரு வேளைக்கு 50 முதல் 150 ரூபாய் வரை செலவழித்து பசியாற வேண்டிய நிலைக்கு ஏழை, எளிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

திட்டமிட்டு முடக்கப்படும் அம்மா உணவகம்..!

இதேபோல பிற அம்மா உணவகங்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு இடுபொருட்களையும் பாதிக்கும் மேல் மாநகராட்சி நிர்வாகம் குறைத்துவிட்டது. முன்னர் இரண்டாயிரத்து 400 கிலோ அரிசி வழங்கப்பட்ட நிலையில், தற்போது 600 கிலோ அரிசி மட்டுமே வழங்கப்படுவதால், அம்மா உணவகத் திட்டம் திட்டமிட்டு முடக்கப்படுகிறது. இதனால், பெரும்பாலானோர் பசியாற்ற முடியாமல் திரும்பிச் செல்கின்றனர்.

மேலும், காய்கறிகள், வெங்காயம், தக்காளி எல்லாம் விண்ணைத் தொடும் அளவுக்கு விலை உயர்ந்துவிட்ட நிலையில், அவற்றை வாங்குவதற்காக வழங்கப்படும் தொகையும் போதவில்லை என அம்மா உணவக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சில இடங்களில் அம்மா உணவகம் இருப்பதையே மறைத்து, மக்கள் பயனடைவதை தடுக்கும் வகையில், விடியா திமுக அரசு செயல்பட்டு வருகிறது. உதாரணத்துக்கு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணியின் காரணமாக, அம்மா உணவகமே மறைக்கப்பட்டு விட்டது. இருப்பினும் அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய ஏழை, எளியவர்கள், இப்போதும் கூட மணிக்கணக்கில் காத்திருந்து அம்மா உணவகத்தில், உணவு வாங்கி செல்கின்றனர்.

தேவையற்ற வீண் விளம்பரங்களுக்கெல்லாம் சாலையில் பேனர் வைத்து உயிர் பலி வாங்கும் விடியா அரசு, மக்கள் பயனடையும் அம்மா உணவகத்தை அனைவரும் காணும்படி பாதுகாப்பான வகையில் பேனர் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.

எனவே, விடியா அரசு மக்கள் வரவேற்புடைய அம்மா உணவக திட்டத்துக்கு மூடு விழா காண நினைக்கும் கனவை மூட்டை கட்டி வைத்துவிட்டு, கூடுதலாக உணவு பொருட்களை வழங்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Exit mobile version