தமிழக அரசியல் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் அசைக்கமுடியாத சக்தியாக திகழ்ந்தார் ஜெயலலிதா. காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய தேசிய கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக ஜெயலலிதா இருந்தார். 2014ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்காமல், “மோடியா இல்ல இந்த லேடியா” என்று பிரச்சாரம் மேற்கொண்டு 39 தொகுதிகளில் 37ல் வென்று அசத்தினார் ஜெயலலிதா. இந்த வெற்றியின் மூலம் தேசிய அளவில் கட்சியை 3வது அந்தஸ்த்திற்கு உயர்த்தினார் ஜெயலலிதா.
இந்திரா காந்தியுடன் ஜெயலலிதா :
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச, அன்றே எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை அனுப்பினார். ஜெயலலிதாவிடம் இருந்த பேச்சு திறமை, அபாரமான ஆங்கில பேச்சு, இந்தி மொழி புலமை மற்றும் ஆளுமையை கவனித்த எம்.ஜி.ஆர், தேர்தல் கூட்டணி குறித்து பேச அனுப்பினார். தன் பேச்சுகளால் இந்திரா காந்தியை கவர்ந்தார் ஜெயலலிதா.
அதே போல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் இணைந்து ஒரே மேடையில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வெற்றி பெற்றார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நட்புறவு கொண்ட ஜெயலலிதா, நாடாளுமன்ற தேர்தலில் மோடியுடன் கூட்டணி வைக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். ஜெயலலிதாவுடன் கூட்டணி தொடர்பான காரர் போக்கை சற்று தணிக்க பாரதிய ஜனதா முற்பட்டும் எந்த பலனும் அளிக்கவில்லை.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், நரசிம்ம ராவ், இந்நாள் பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கட்சி தலைவர்கள் மம்தா பானர்ஜி, முலாயம்சிங் யாதவ், சந்திரபாபு நாயுடு முதல் அமெரிக்க ஹில்லாரி கிளின்டன் வரை ஜெயலலிதாவிற்கு தேசிய அரசியல் செல்வாக்கு இருந்தது.