கொத்தடிமை மீட்பு மற்றும் மறுவாழ்வு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொத்தடிமை முறையை ஒழிக்க மாவட்ட ஆட்சியர்கள் முழு வீச்சில் செயல்பட வேண்டும் என்றும் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்த தரவுகளை இணையத்தில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்கள் விவரங்களை மாதம் தோறும் தொழிலாளர் துறை ஆணையர் அரசுக்கு அனுப்புதல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்து தகவல் வழங்குவோரின் ரகசியம் காக்கப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கொத்தடிமை புகார்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து அதற்கான ஒப்புதல் நகலை புகார் கொடுத்தவருக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. விசாரணை குழுவில் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், காவல் உதவி ஆய்வாளர் தரத்தில் உள்ளவர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொத்தடிமை மீட்பு மற்றும் மறுவாழ்விற்காக தமிழக அரசு 1 கோடியே 25 லட்சம் ரூபாயை ஆண்டுதோறும் ஒதுக்குவதையும் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.