ஏப்ரல் 14ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் பொது விடுமுறையை அறிவித்துள்ளது மத்திய அரசு. டாக்டர் அம்பேத்கர் ஏப்ரல் 14 1891 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் உள்ள அம்பவாடே எனும் ஊரில் மாவ் எனும் பகுதியில் பிறந்தார். தந்தை ராம்ஜி, தாய் பீமாபாய் ஆகும். தான் பிறந்த சமூகமானது மற்றவர்களால் மிகவும் கீழாக நடத்தப்படுவதை சிறுவயது முதலே அறிந்த அம்பேத்கர் கடுமையாக படித்தார். தீண்டாமை போன்ற சாதிக் கொடுமைகளை அவர் இளம் பிராயத்திலிருந்தே சந்தித்து வந்தார். அதனாலேயே கடுமையாக படித்தார்.
ஒருமுறை அம்பேத்கர் இரவு அதிக நேரம் கண்விழித்துப் படித்துக் கொண்டிருந்தபோது, உங்கள் நண்பர் காந்தியும், நேருவும் இந்நேரம் உறங்கியிருப்பார்கள். ஆனால் நீங்கள் ஏன் முழித்து வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று ஒரு நபர் கேட்டார். அதற்கு அம்பேத்கர், அவர்களின் சமூகம் விழித்துக்கொண்டிருப்பதால் அவர்கள் உறங்கலாம். ஆனால் என் சமூகம் விழித்துக்கொள்ள நான் உறங்காமல் இருந்தாக வேண்டும் என்று பதில் அளித்தார். இந்திய அரசியலமைப்பு உருவாகக் காரணமாக இருந்தவரும் அவரே. அப்படிப்பட்ட அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதியை பொதுவிடுமுறை நாளாக அறிவித்துள்ளது மத்திய அரசு.