அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்யும் யாத்திரை வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் துவங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோயிலில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்கின்றனர். மலைப்பாதைகளில் மேற்கொள்ளப்படும் இந்த பயணத்தை பக்தர்கள் விரும்பி மேற்கொள்கின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் துவங்கவுள்ளதாக ஜம்முவின் ராஜ்பவன் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜம்முவில் ஆளுநர் சத்யபால் மாலிக் தலைமையில் நடைபெற்ற 36-வது கூட்டத்தின் முடிவில், இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி துவங்கி ஆகஸ்ட் 15-ம் தேதிவரை 46 நாட்கள் இந்த யாத்திரை நடைபெறவுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
உலக அளவில் கவனத்தை பெற்றுள்ள இந்த யாத்திரையை சீர்குலைக்கும் முயற்சியில் தீவிரவாதிகள் ஈடுபடுவதால், இந்த யாத்திரையில் பக்தர்களுக்கு தீவிர பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் ஈடுபடுவார்கள். கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதத்தில் யாத்ரிகர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.