ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் கூடும் பகுதியில் வெடுகுண்டுகள், கண்ணிவெடிகள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து யாத்ரீகர்கள் உடனடியாக சொந்த ஊர் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அமர்நாத் பனி லிங்கத்தை வழிபட ஏராளமான யாத்ரீகர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வெளியானத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில் வெடிகுண்டுகள், கண்ணிவெடிகள் கண்டெடுக்கப்பட்டன.
கண்டெடுக்கப்பட்ட கண்ணிவெடிகள் பாகிஸ்தான் ராணுவத்தால் பயன்படுத்தப்படுபவை என்றும், இதன்மூலம் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் துணை நிற்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பதாக வந்த தகவல்களை அடுத்து மாநிலம் முழுவதும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வழிபாடு முடித்த பக்தர்கள் உடனடியாக காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறுமாறு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரிடையே விமர்சனங்கள் எழுந்தது.
இந்த நிலையில், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் நலன் கருதியே அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.