திருவள்ளூர் அருகே, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. 35 ஆண்டுகளுக்கு முன்பாக ஒன்றாக படித்த மாணவர்கள் கலந்துகொண்டு தங்களின் பள்ளி காலத்தை நினைவு கூர்ந்தனர்.இது குறித்து செய்தித் தொகுபை பார்க்கலாம்…
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த பண்ணூர் கிராமத்தில் உள்ளது தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி. 1958 ல் தொடங்கப்பட்ட இப்பள்ளி இந்த ஆண்டு 60 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனை சீரும் சிறப்புமாக கொண்டாட நினைத்த பள்ளி நிர்வாகம், இப்பள்ளியில் பயின்ற அனைத்து மாணவர்களையும் ஒன்று சேர்க்க முடிவு செய்தனர். அதன்படி, பள்ளியின் வைர விழாவிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடினர். நீண்ட நாட்களுக்கு பின்பு தன்னுடன் பயின்ற சக மாணவரை பார்த்த அவர்கள், கட்டிப்படித்து உற்சாகமடைவதும், கை குலுக்கி மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள், செல்போன் மூலம் செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.
படிப்பில் மிகவும் பின்தங்கியிருந்த காரணத்தால் சென்னையில் படித்து வந்த தன்னை இந்த பள்ளியில் சேர்த்ததாகவும், இப்பள்ளி தன்னை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கியதால், தற்போது போதை தடுப்பு பிரிவு காவல் துறையில் டி.,எஸ்.பி.யாக இருப்பதாக முன்னாள் மாணவர் ஜூலியஸ் சீசர் கூறுகிறார்.இந்த பள்ளியில் பயின்றதாலேயே சென்னையில் மருத்துவராக இருப்பதாகவும், ஒரு வேளை இந்த பள்ளியில் படிக்காமல் இருந்திருந்தால், தான் என்ன ஆயிருப்பேன் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவிலை என முன்னாள் மாணவரும், மருத்துவருமான சரவணன் உணர்ச்சி பெருக்குடன் கூறினார்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் உணவை சமைத்து அனைவருகும் வழங்கி மகிழ்ந்தனர்.
Discussion about this post