அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகள்; மாடுபிடி வீரர்கள் உற்சாகம்

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

அலங்காநல்லூர் கோட்டை முனியசாமி கோயில் திடலில், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்து 400 காளைகள் மற்றும் 848 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

காலை எட்டு மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. முதலாவதாக 3 கோயில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

வாடிவாசல் வழியே காளைகள் சீறிப் பாய்ந்து வருகின்றன. களத்தில் நிற்கும் வீரர்கள், காளைகளை அடக்க உற்சாகம் காட்டி வருகின்றனர். வீரர்களுக்கு சவால் விட்டு களத்தில் அசத்தி வரும் காளைகளை ஏராளமானோர் கண்டு ரசித்து வருகின்றனர்.

ஒரு மணிநேரத்திற்கு 75 பேர் வீதம், வீரர்கள் களமிறக்கப்படுகின்றனர். வெற்றிபெறும் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு கார், தங்கம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் பார்வைக்காக கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

Exit mobile version