மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவை தொகையை செலுத்திய ஏர்டெல் நிறுவனம்

உச்சநீதிமன்ற கண்டனத்தின் எதிரொலியாக ஏர்டெல் நிறுவனம் மத்திய அரசுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையில் 10 ஆயிரம் கோடியை செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

வேடாஃபோன் ஐடியா, ஏர்டெல், உள்ளிட்ட 15 தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் உரிமைக் கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகையில் 1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கித் தொகையை செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஏர்டெல் நிறுவனம் மத்திய தொலைத்தொடர்பு துறைக்கு மொத்தம் 35 ஆயிரத்து 586 கோடி நிலுவைத் தொகை செலுத்த வேண்டிய தொகையில், 10 ஆயிரம்  கோடி ரூபாயை முதல்கட்டமாக செலுத்தியுள்ளது. செலுத்தப்பட்ட நிலுவையில் ஏர்டெல் நிறுவனத்துக்கான 9 ஆயிரத்து 500 கோடியும், பாரதி ஹெக்ஸாகாம் நிறுவனத்துக்கான 500 கோடியும் அடங்கும். சுயமதிப்பீட்டுக்குப் பிறகு மீதமுள்ள தொகை தொலைத்தொடர்பு துறைக்கு வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வோடஃபோன் ஐடியாவும் தாம் செலுத்த வேண்டிய மொத்த நிலுவையில் 2 ஆயிரத்து 500 கோடியை தொலைத் தொடர்புத் துறையிடம் வழங்கியதாக தகவல் வெளியானது. மேலும், ஆயிரம் கோடியை வரும் வெள்ளிக்கிழமைக்குள் செலுத்த அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

Exit mobile version