உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானமான “ஏர் பஸ் பெலுகா” எரிபொருள் நிரப்புவதற்காக நேற்று சென்னை விமான நிலையம் வந்தது. இதில் ஒரே நேரத்தில் 47 டன் எடை சரக்குகளை ஏற்ற முடியுமாம்.
குஜராத்தில் இருந்து தாய்லாந்து சென்று கொண்டிருந்த ஏர்பஸ் பெலுகா விமானமானது எரிபொருள் நிரப்புவதற்காக சென்னை விமானநிலையம் இறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகத்திலேயே மிகப்பெரிய சரக்கு விமானம் என்று அழைக்கப்படும் பெலுகா ‘திமிங்கலம்’ வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏர்பஸ் நிறுவனமானது நெதர்லாந்தை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் ஃபிரான்ஸ் நாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில்தான் ஏர்பஸ் நிறுவனமானது பெரிய ரக பொருட்களையும், பல்வேறு வடிவிலான சரக்குகளையும் விமானத்தில் ஏற்றிச் செல்ல வசதியாக ஒரு விமானத்தை தயாரிக்க நினைத்தது. அதன்படி திமிங்கலம் வடிவில் சூப்பர் டிரான்ஸ்போர்ட்டர் என்கிற பெலுகா (ஏ300-608எஸ்டி) என்ற புதிய சரக்கு விமானத்தை 1995 ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்தது. இந்த சரக்கு விமானமானது ஒரே நேரத்தில் 47,000 கிலோ (47 டன் ) எடை சரக்குகளை ஏற்றி செல்லும் திறன் உடையது. இந்த ரக பெரிய சரக்கு விமானம், நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 9:30 மணி அளவில் சென்னை பழைய விமான நிலையம் வந்தது.
இதே விமானம் கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தெதி குஜராத்தில் இருந்து தாய்லாந்து சென்று கொண்டிருக்கும்போது சென்னை விமான நிலையத்தில் இறங்கி எரிபொருள் நிரப்பிக்கொண்டு சென்றது. தற்போது ஓராண்டு கழித்து மீண்டும் அந்த நிகழ்வு தற்போது அரங்கேறியுள்ளது. இதனை தற்போது நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவு பகிர்ந்து வருகின்றனர்.