பாகிஸ்தானில் இசைநிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர் மிகா சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அனைத்திந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திரைப்படப் பின்னணிப் பாடகர் மிகா சிங் கடந்த 8ம் தேதி பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடைபெற்ற ஓர் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடினார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முசாரப்பின் உறவினர் ஏற்பாடு செய்திருந்த அந்த நிகழ்ச்சியில் தலைமறைவு தாதா தாவூத் இப்ராகிமின் குடும்பத்தினரும் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாடகர் மிகா சிங்குக்கு அனைத்திந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது. மிகா சிங்கை எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை எனவும், சங்கத்தின் உறுப்பினர்கள் அவரது நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகா சிங்கின் நிகழ்ச்சியில் பங்கேற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற மிகா சிங் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்திடம் திரைப்படத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.