அதிமுக அரசு கொண்டுவந்த மக்கள் நலத்திட்டங்களை, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் முடக்கும் திமுக அரசை எதிர்த்தும், மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச வாய்ப்பு மறுக்கப்படுவதை கண்டித்தும், சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெளிடப்புக்குப் பின்னர் கலைவாணர் அரங்க வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் முக்கியமான நிகழ்வுகளை சுட்டிக்காட்டுவதற்கு உரிய நேரம் ஒதுக்கப்படுவதில்லை என குற்றம்சாட்டினார்.
விழுப்புரம் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைகழகத்தை திமுக அரசு முடக்கியதை போல், உழைக்கும் மகளிருக்கான இருசக்கர வாகன திட்டம், தாலிக்கு தங்கம் உட்பட அதிமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்களையும் திமுக அரசு முடக்கிவிட்டதாக குற்றம்சாட்டினார்.
முன்னதாக பேரவையில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியதை பெருமிதமாக குறிப்பிட்டார்.
உழைக்கும் மகளிருக்கான இருசக்கர வாகன திட்டம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்கள் இந்த ஆட்சியாளர்களால் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த போது குறிக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், கல்வித்துறையில் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை என்று தெரிவித்தார்.
அவை முன்னவரின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.