எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது நேரலையில் தவிர்க்கப்படுவதைத் தொடர்ந்து அதிமுக வெளிநடப்பு – அதிமுக கொறடா எஸ்பி.வேலுமணி

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவது நேரலை தவிர்க்கப்படுவதை தொடர்ந்து பேரவை கூட்டத்தை புறக்கணித்து அதிமுக வெளிநடப்பு செய்தாக எதிர்க்கட்சிக் கொறடா எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி பென்னிகுவிக் சிலை தொடர்பாக கவனயீர்ப்பு தீர்மானத்தில் பேசினார். இந்த நிகழ்வை சட்டப்பேரவையில் நேரலையில் ஒளிபரப்பவில்லை. தொடர்ந்து நான்கு நாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை நேரலை செய்வதை தவிர்த்து வருவதை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் அமைச்சர்களின் பதிலுரையை புறக்கணித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சமூக நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதில் உரை அளித்த அமைச்சர் கீதா ஜீவன் பேசுவதை புறக்கணித்து  வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி கொறடா எஸ்பி வேலுமணி அதிமுக தொடர்ந்து சட்டப்பேரவையில் வலியுறுத்தி வருவதாகவும், முதலமைச்சர், அமைச்சர்கள் பேசுவது மட்டுமே நேரலை செய்யப்படுகிறது. நேரம் இல்லா நேரத்தில் பேசப்படுகிற முக்கியமான மக்களுடைய பிரச்சனைகளை மக்களுக்காக எதிர்க்கட்சித் தலைவர் பேசும் பொழுது, கேள்விகள் நேரலை செய்யப்படுவதில்லை. அதற்கு அமைச்சர்கள் கூறும் பதில் மட்டுமே நேரலை செய்யப்படுகிறது. அடிப்படை பிரச்சினைகளை பேசும்போது அதிமுக உறுப்பினர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. பென்னி குவிக் குறித்து கவனம் ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதையும் ஒளிபரப்பு செய்யவில்லை. திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தொகுதி பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் பேசுவதையும் நேரலை செய்யப்படுவதில்லை என குற்றம் சாட்டினார். இதனால் அதிமுக உறுப்பினர்கள் பேரவை பதிலுரைக் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.

Exit mobile version