புதுச்சேரி மாநிலம் முத்தையால்பேட்டை தொகுதியில் வசித்து வரும் ஆதிதிராவிட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
முத்தையால்பேட்டை தொகுதியில் ஆதிதிராவிட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இலவச மனைப்பட்டா மற்றும் நிலுவையில் உள்ள 1 கோடி ரூபாய் அளவிலான நலத்திட்ட பணிகளை உடனடியாக செய்து முடிக்க வையாபுரி மணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தநிலையில், தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆதிதிராவிடர் நலத்துறை வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர், புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ஆதிதிராவிட நலத்துறை இயக்குநர் ரகுநாதன் பேச்சு வார்த்தை நடத்தினார். வரும் பட்ஜெட்டில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.