உணவு தட்டுப்பாடு இருக்கும் வேலையில் விளையும் நிலங்களை கையகப்படுத்தும்
திட்டத்தை என்.எல்.சி. நிர்வாகம் கைவிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் டி
ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ராயபுரத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக தக்காளி வழங்கும்
நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பெண்களுக்கு, ஒவ்வொருவருக்கும் தல ஒரு கிலோ தக்காளியை இலவசமாக வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி ஜெயக்குமார், தமிழகத்தில் தக்காளி, இஞ்சி, சின்ன வெங்காயம் போன்ற அத்யாவசிய உணவு பொருட்கள் கடும் விலை உயர்வை சந்தித்திருக்கும் வேளையில், அவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் இருக்கும் பொழுது, அதற்கென தனி கவனம் செலுத்தி, மானிய விலையில் அத்தியாவசிய பொருட்களை கொடுக்க நடவடிக்கை எடுக்க திமுக அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார். நியாய விலை கடைகள் மூலம் கொடுக்கப்படும் தக்காளி அனைவருக்கும் கிடைக்பதில்லை என்றார்.
மாமன்னன் படம் குறித்து கருத்து தெரிவிக்கும் சென்னை மாநகராட்சி மேயர், விலை
உச்சத்தில் இருக்கும் தக்காளி விலை ஏற்றத்தை சமாளிக்க ஏழை எளிய மக்களுக்கு
மானிய விலையில் தக்காளி கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல்,
தக்காளி எங்களது துறை அல்ல என பதில் சொல்வது வேடிக்கையான ஒன்றாக உள்ளது என கூறினார். உணவு தட்டுப்பாடு இருக்கின்ற இந்த வேளையில், விளையும் நிலங்களை
கையகப்படுத்தும் என்எல்சி நிர்வாகத்தின் முடிவை பரிசீலிக்க வேண்டும் என்றும்,
முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் கூறினார். நெய்வேலியில் நேற்று நடந்த
கலவரத்தை ஆளும் திமுக அரசு கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும், காவல்துறை
சமயோசிதமாக செயல்படாததும் கலவரத்துக்கு காரணம் என குற்றம் சாட்டினார்.
நெய்வேலியில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக 39 நாடாளுமன்ற
உறுப்பினரை வைத்திருக்கும் திமுக நாடாளுமன்றத்தில் இதுவரை குரல் கொடுக்காதது
ஏன் என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
நாட்டு மக்களின் நலனை கருதி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த புரட்சித் தலைவர்,எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா குறித்து அமித்ஷா பேசியதாகவும், திமுகதலைவர்களை குறிப்பிட்டு பேசும் அளவுக்கு எந்த மக்கள் திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்றும் ஜெயக்குமார் விமர்சித்தார். திமுக தலைவர்களை குறிப்பிட்டு பேச வேண்டும் என்றால் ஊழல், குடியைப் பற்றி மட்டுமே பேச முடியும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் கைதி எண் பெற்ற ஒருவர், அமைச்சரவையில் நீடிப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று விமர்சித்த முன்னாள் அமைச்சர்
ஜெயக்குமார், சிறையில் இருந்து கொண்டு அமைச்சர் பணியை எப்படி ஒருவரால் செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
மீனவர்களை பழங்குடி இனத்தவர் பட்டியலில் சேர்க்க அதிமுக தொடர்ந்து குரல்
கொடுத்து வருவதாகவும், மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த திமுக அவர்களுக்காக
இதுவரை குரல் கொடுக்காதது ஏன் என்றும் டி ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளில் உயர்கல்விக்கு செல்லும்
மாணவர்களுடைய எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பதாக சுட்டி காட்டினார்.
குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சியில் 51 விழுக்காடு மாணவர்கள் உயர்கல்விக்கு
சென்ற நிலையில், தற்போதைய திமுக ஆட்சியில் 25 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே
உயர் கல்விக்கு சென்று உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தொகுதியில் 40 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றும் ஜெயக்குமார் கூறினார். தமிழகத்தில் ஊடகத்தினருக்கும்,
ஊடகங்களுக்கும் மிரட்டல் வரும்போதெல்லாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க
வேண்டுமே தவிர ஆளும் அரசை கண்டு அச்சப்படக்கூடாது என்றும் டி ஜெயக்குமார்
கூறினார்.
Discussion about this post