நிர்வாக திறனற்ற விடியா திமுக அரசால், விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருவதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுகவின் நல்திட்டங்கள்..!
சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் கோரணம்பட்டி கஸ்பா பகுதியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கழக கொடியினை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். அதில், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்யும் ஒரே கட்சி அதிமுக என்றும், இந்தியாவிலேயே அதிக தார் சாலைகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்ற பெயரை பெற்றது அதிமுக ஆட்சியில்தான் என்றும், கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமையுடன் குறிப்பிட்டார். அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட வறண்ட 100 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டத்தை விடியா அரசு முடக்கி வைத்துள்ளதாக குற்றம்சாட்டிய கழக பொதுச் செயலாளர், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் முதியோர் உதவித் தொகை திட்டம், தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை உள்ளிட்ட எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை சாக்கு போக்கு சொல்லி விடியா அரசு நிறுத்தி வைத்துள்ளதாக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா அரசு!
மேலும், தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஸ்டாலின் காற்றில் பறக்கவிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். நிர்வாக திறனற்ற விடியா திமுக அரசால், விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருவதாக, கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனை தெரிவித்தார். மேலும் திமுகவில் பல ஆண்டுகளாக உழைப்பவர்கள் புறக்கணிக்கப்பட்டு, உதயநிதியை மட்டுமே ஸ்டாலின் முன்னிலைப்படுத்துவதாக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினார்.மேலும் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஏழை மாணவர்களின் வாழ்வில் பால் வார்த்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம் என்றும், ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றவே அதிமுக ஆட்சியில் 7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டு, மாணவர்களின் கல்வி கட்டணத்தையும் அதிமுக அரசு ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார். எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு சென்ற ஸ்டாலின், காவிரி விவகாரம் குறித்து பேசாமல், மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதுகிறார் என்றும், ஸ்டாலினை நம்பி விவசாயிகள் பயிர் செய்து வேதனையில் உள்ளதாக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினார்.
அதிமுக ஒரு போதும் எந்தக் கட்சிக்கும் அடிமை இல்லை..!
அதிமுக ஒருபோதும் எந்த கட்சிக்கும் அடிமை இல்லை என்றும், அடிமை இல்லாத காரணத்தினால்தான் கூட்டணியில் இருந்தபோதும், மக்களுக்காக நாடாளுமன்றத்தை 22 நாட்கள் இயக்க விடாமல் குரல் கொடுத்தோம் என்று தெரிவித்த கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, தங்களை காப்பாற்றிக் கொள்ளவே விடியா திமுக அரசு அடிமையாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார். இறுதியாக பேசிய கழக பொதுச்செயலாளர், மக்களை ஏமாற்றும் ஸ்டாலினுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்களே தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.